பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்குச் செயற் குழு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கான உத்தியை விரைவாக நடைமுறைப்படுத்த செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, நிதி அமைச்சு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, சுற்றுலா அமைச்சு, மீன்பிடி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் இந்தச் செயற்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி வகித்த போது பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களுக்குத் தீர்வு காண்பதற்காக முத்தரப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழு வேலை இழந்தவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கான ஒரு மூலோபாய திட்டத்தைத் தயாரித்தது மற்றும் அதை செயல்படுத்தும் பொறுப்பு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறு உலகத் தொழிலாளர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், உலகத் தொழிலாளர் அமைப்பு ஆய்வு நடத்தி அதன் இறுதி அறிக்கையை அமைச்சிடம் ஒப்படைத்திருந்தது.

பின்னர், முத்தரப்புக் குழு பல சுற்றுக் கலந்துரையாடல்களின் மூலம் நீண்டகால, மத்திய மற்றும் குறுகிய கால அடிப்படையில் கண்டறியப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் பகுதிகளைக் கண்டறிந்து, அந்த வேலை வாய்ப்புகளுக்கு மக்களை வழிநடத்துவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.