இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ்த் தலைமைகள் தவிர்க்கவேண்டும்! எச்சரிக்கிறார் சரத் வீரசேகர

அதிகாரப் பகிர்வு என்ற நோக்கத்துடன் ஜனாதிபதியை சந்தித்து இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பலர் உயிர் தியாகம் செய்து நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துள்ளார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கத்துக்காக நாட்டை பிளவுப்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த தீர்மானங்களால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நல்லாட்சி அரசாங்கம் எவ்வித நெருக்கடிகளும் இல்லாத சூழலில்  சர்வதேச பிணைமுறிகளிடமிருந்து 12.5 பில்லியன் டொலர் கடன் பெற்றது. பொருளாதாரப் பாதிப்பை தீவிரப்படுத்தும் பல தீர்மானங்களை எடுத்தது.

2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எமது அரசாங்கம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டது. கொவிட் பெருந்தொற்றுத் தாக்கம், அந்நிய செலாவணி உள்வருகை வீதம் வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால் பொருளாதாரப் பாதிப்பு தீவிரடைந்தது.

கையிருப்பில் இருந்த டொலர் கொவிட் தடுப்பூசிக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதனால் நாடு பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கப்பட்டது. ஆகவே பொருளாதாரப் பாதிப்புக்கு நல்லாட்சி அரசாங்கம் பெருமளவில் பொறுப்புக்கூற வேண்டும்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை முறையாக செயற்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும், அதிகார பகிர்வு கோரியும் பேச்சில் ஈடுபடுகிறார்கள்.

வீடு பற்றி எரியும் போது  சிகரெட் பற்ற வைப்பதற்கு அந்த வீட்டில் இருந்து தீ எடுப்பதை போல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியத்தை ஒட்டுமொத்த தமிழர்களின் அவசியம் என்று குறிப்பிட முடியாது. கூட்டமைப்பினர் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றார்களாயின் ஏன் அவர்கள் 5 தேர்தல் நிர்வாக மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிடுகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் ஏன் அவர்கள் போட்டியிடுவதில்லை.

காணி விவகாரத்தில் ஒரு மாகாணத்துக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்க முடியாது. வழங்க வேண்டுமாயின் சகல மாகாணங்களுக்கும் அந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வரலாற்று காலத்தில் இருந்து பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்.

30 வருட கால யுத்தத்தில் 29 ஆயிரம் படையினர் உயிர் தியாகம் செய்து,14 ஆயிரம் படையினர் தமது உடல் அங்கங்களை நாட்டுக்காக இழந்து நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தார்கள்.

இவ்வாறான அர்ப்பணிப்புக்களுடன் பாதுகாத்த ஒற்றையாட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு,தமிழ் அரசியல்வாதிகளின் நோக்கத்துக்காக பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்க போவதில்லை.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அறிமுகப்படுத்தியது. இலங்கை – இந்திய ஒப்பந்தம் தற்போது வலுவற்றுள்ளது.

ஏனெனில் இந்தியா பல நிபந்தனைகளை அமுல்படுத்தவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலை புலிகள் அமைப்பின் மறைமுக சக்தி. விடுதலை புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் 30 வருடங்கள் வாழ்ந்தார்கள்.ஆகவே புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களா? என்பதை நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு மாகாணம் முன்னேற்றமடைந்துள்ளது. வடக்கில் கல்வி, தொழில் நிலை உயர்வடைந்துள்ளது. மொத்த சனத்தொகையில் 52 சதவீதமான தமிழர்கள் சிங்களவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். இப்போது நாட்டில் என்ன இனப்பிரச்சினை உள்ளது என்பதை உயரிய சபை ஊடாகக் கேட்கிறேன்.

அதிகாரப் பகிர்வுக்காக ஜனாதிபதி சந்தித்து இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் பொய்யுரைப்பதற்கு அச்சமடைந்ததில்லை, சிங்கள அரசியல்வாதிகள் உண்மையைக் கூறுவதற்கு அச்சமடைந்தார்கள். இதுவே இன்றை பிரச்சினைக்கு மூல காரணியாக உள்ளது. ஆகவே, தமிழ் அரசியல்வாதிகளின் பொய்யை சர்வதேசம் தமது பூகோள அரசியலுக்காக ஏற்றுக்கொண்டது.

இலங்கை ஒற்றையாட்சி நாடு. ஆகவே, இலங்கையில் சமஷ்டியாட்சி முறைமையிலான  கட்டமைப்பைத் தோற்றுவிக்குமாறு தமிழ் தரப்பினர் குறிப்பிடுகின்றமை நகைப்புக்குரியது. எக்காரணிகளுக்காகவும் அதிகாரப் பகிர்வுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் குறிப்பிட்டுக் கொள்கிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.