இராணுவ வீரர்களுக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமாம் கோருகிறார் நாமல்

கடந்த காலங்களில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள் தமிழிழ விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பலருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதிலும், சிறையில் இருந்தவர்களை விடுவிப்பதிலும் தவறில்லை.

இராணுவத்தில் இருந்தவர்களும் குற்றவாளியாக இருக்கின்றனர். அவர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வழக்கொன்றில் ஆஜராவதற்காக திங்கட்கிழமை நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த போது மத்திய வங்கி குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தண்டனை வழங்கப்பட்ட இருவருக்கு அண்மையில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

கடந்த காலங்களில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள் தமிழிழ விடுதலை புலிகள் இயக்கத்தைச்  சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு வழங்கியதை நாம் பார்த்தோம்.

சந்தேகநபர்கள் பலருடன் நானும் சிறையில் இருந்தேன். 91 பேர் உயிரிழந்ததுடன் 200 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்த குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தக் குற்றவாளிகளுடனும் நான் சிறையில் இருந்தேன். மெகசின் சிறைச்சாலையில் அவர்கள் என்னுடன் இருந்தார்கள். முறையாக அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதிலும் 15 அல்லது 20 வருடங்கள் சிறையில் இருந்தவர்களை விடுவிப்பதிலும் தவறில்லை. இராணுவத்தில் இருந்தவர்களும் குற்றவாளியாக இருக்கின்றனர்.

அவர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்  என நான் நம்புகிறேன். ஏனென்றால் அந்த சம்பவத்தை இத்துடன் மூட வேண்டும். இதனைத் தமிழிழ விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு மாத்திரம் வழங்க முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.