அரச குடிசார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்; சங்க கிழக்கின் வருடாந்த பொதுக் கூட்டம்!
கிழக்கு மாகாண அரச குடிசார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மட்டக்களப்பு, கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியோன்றில் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்றது.
அச் சங்கத்தின் தலைவர் எஸ்.வரதராஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அனுசரணையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான மேற்படி கிழக்கு மாகாண அரச குடிசார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் வரவேற்புரை, தலைமையுரை என்பன நிகழ்த்தப்பட்டதுடன் சங்க உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த பொதுக்கூட்டத்தின் கூட்ட குறிப்புகள், நிதிக் கூற்றுக்கள் என்பன முறையே சங்கத்தின் பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டு, பொதுச்சபை உறுப்பினர்களின் அங்கீகாரமும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தப் பொதுக் கூட்டத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கி வரும் நிர்வாக ரீதியான அழுத்தங்கள், பதவியுயர்வு தாமதங்கள், இடமாற்றங்கள் தொடர்பான பிரச்சினைகள் என பல்வேறு விடயங்கள் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டு, பரிசீலிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் விடய அமைச்சுக்களின் ஊடாகத் தீர்வுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன். ஏனைய தொழில்சார் நாடளாவிய சேவைகள் போன்று தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவையையும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை ஏனைய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கங்களின் துணையுடன் முன்னெடுப்பது என்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் தொழில் தகைமையை விருத்தி செய்தல், வேதன அதிகரிப்புக்கான ஏற்பாடுகளை ஆராய்தல் என பல்வேறு தீர்மானங்களும் இங்கு எட்டப்பட்டன.
அத்துடன், மேற்படி நிகழ்வின் அனுசரணையாளர்கள் அனைவரும் கிழக்கு மாகாண அரச குடிசார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் நினைவு சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை