மருந்துக் கொள்வனவை நிறுத்தவும் நடவடிக்கை! சுகாதார அமைச்சர் கெஹலிய எகத்தாளப் பேச்சு

இந்திய கடன் உதவியின் கீழ் எமக்கு 237 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றது. அதற்கமைவாக இதுவரையில் 207 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளோம்.

இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கான மருந்துகளில் ஒரு மருந்து தரமற்றதாக இருக்கலாம். இருப்பினும் எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டில் சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடி மற்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் சுகாதார அமைச்சு  ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் –

இந்திய கடன் உதவியின் கீழ் எமக்கு 237 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றது. அதற்கமைவாக இதுவரையில் 207 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளோம். அந்த 207 பில்லியன் ரூபாவில் 600 இற்கும் அதிக வகையான மருந்துகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 294 மருந்துகளைப் பெற்றுள்ளோம். உதாரணமாக 294 மருந்துகளை இறக்குமதி செய்யும் பட்சத்தில் அந்த மருந்துகளில் ஒரு மருந்து தரமற்றதாக இருக்கலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அந்த 294 மருந்துகளையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பட்சத்தில் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழுந்து இருக்கும்.

அவசர கொள்வனவு மற்றும் சாதாரண முறையில் கொள்வனவு செய்வது தொடர்பில் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதாரணமாக எடுத்துக் கொள்ளும் போது  அரிசி, சீனி, மிளகாய் தூள் என்பவற்றுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவும் போது வர்த்தக அமைச்சருக்கு உடனடியாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். அங்கு விநியோகஸ்தர்களை சந்தித்து விலைகளை பேசி தீர்மானித்து, அதன் பின்னர் 500 இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் மூலம் அவற்றை  இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்வதற்கு முடியும்.

இருப்பினும் மருந்துகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது. குறிப்பாக மருந்து ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு ஆரம்பத்திலிருந்து குறைந்தது 6 அல்லது 9 மாதங்கள் எடுக்கும்.

இந்தக் காலப்பகுதிக்குள் எமக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படும். நிதிப் பிரச்சினை அல்லது செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியாமல் போகலாம். இருப்பினும் இவற்றை விடுத்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு எமக்குள்ள  வழியொன்று தான் அவசர மருந்து கொள்வனவு முறையாகும்.

என்னால் பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்ள முடியும். அவசர கொள்வனவு மற்றும் சாதாரண முறைப்படி கொள்வனவில் காலப்பகுதி மாத்திரமே வேறுபடும். இருப்பினும் கொள்வனவின் போது பின்பற்றப்படும் முறைகளில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது.

விளம்பரப்படுத்த வேண்டும், விலைமனுக்கோரல் இடம்பெற வேண்டும், காலப்பகுதி குறிப்பிடப்பட வேண்டும். இருப்பினும் இறுதியில் காலப்பகுதியில் மாத்திரமே மாற்றம் நிகழும்.

அதை விடுத்து அவசர மருந்துக் கொள்வனவு எனும் போர்வையில்  விலைமனு இன்றித் தமக்கு விரும்பிய தரப்பினர் மூலம் மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறுகின்றமை தவறாகும். அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் எதிர்வரும் மாதங்களுக்குள் அவசர மருந்துக் கொள்வனவு நிறுத்தப்படும். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.