அரசியல் காய்நகர்த்தலுக்கே ஜனாதிபதி 13 ஐ கையிலெடுத்துள்ளார் : ஐக்கிய மக்கள் சக்தி!
நாடாளுமன்றில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உரியது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், 13 தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி முதலில் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஆராய கடந்த மாதம் ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டிருந்த கட்சிகள் அனைத்தும், மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்துமாறுதான் வலியுறுத்தியிருந்தன.
ஆனால், ஜனாதிபதியோ 13 வேண்டுமா – மாகாணசபைத் தேர்தல் வேண்டுமா என கேட்டார்.
13 ஐ அமுல்படுத்த மாகாணசபை தேவைப்படுகிறது.
இதற்கான தேர்தலை நடத்துமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி தெற்கின் சிங்களக் கட்சிகளும் வலியுறுத்தியவுடன், ஜனாதிபதி மாநாட்டிலிருந்து எழுந்து சென்று விட்டார்.
13 ஆவது திருத்தச்சட்டம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும்.
இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே உள்ளது.
இந்தநிலையில், இதில் உள்ள அதிகாரங்களில் எவற்றையெல்லாம் வழங்க முடியும் என முதலில் அவர் கூறவேண்டும்.
13 ஐ கொண்டுவந்தபோது, எதிர்க்கட்சிகளிடம் அனுமதி கேட்டார்களா? இல்லை. சட்டமூலமொன்றை கொண்டுவர வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கானது.
அது கொண்டுவரப்பட்ட பின்னர், எதிர்க்கட்சிகள் யோசனைகளைத்தான் முன்வைக்க வேண்டும்.
13 இற்கு நாம் ஆதரவானவர்கள்.
13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக வடக்கு – கிழக்கு மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதல்ல இவர்களின் நோக்கம்.
மாறாக, அடுத்த தேர்தலில் அந்த மாகாணங்களில் இருந்து எவ்வாறு வாக்குகளை பெற்றுக் கொள்வது என்ற அரசாங்கத்தின் அரசியல் காய்நகர்த்தலுக்கே இது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை