விமான விபத்துக்கள் தொடர்பாக அரசே பொறுப்புக் கூற வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டிய விமானங்களைப் பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதே உயிரிழப்புக்களுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நேற்று விமான விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். விபத்துக்குள்ளான விமானம் 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.
விமானத்தின் இயந்திரம், 1961 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை நிர்மாணிக்கும்போது நாம் பிறந்துக்கூட இருக்கவில்லை.
பி.டி. 6 எனும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 6 விமானங்கள், விமானிகளின் பயிற்சிக்காக இன்னமும் பயன்படுத்தப்படுகிறது.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான வின் கமான்டர் தரிந்து ஹேரத் எனும் விமான பயிற்சி ஆலோசகரும், அலவ்வ பகுதியைச் சேர்ந்த பயிற்சி விமானியான பெசான் வர்ணசூரிய எனும் இளைஞனும் நேற்றைய விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.
இவர்களின் மரணத்திற்கு யார் காரணம்? அருங்காட்சியத்தில் வைக்கப்பட வேண்டிய விமானத்தில்தான் இவர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள்.
இதுபோன்று 6 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்கள். நாட்டில் விமானிகள் இவ்வாறு உயிரிழப்பது மிகவும் துரதிஸ்டவசமான ஒன்றாகும்.
இதற்கு யார் பொறுப்பு என்பதை அரசாங்கம் கூற வேண்டும். கிபீர் விமானங்களை புதுப்பிக்க 55 மில்லியன் டொலரை அரசாங்கம் செலவு செய்தது.
ஆனால், 0.75 மில்லியன் டொலர்தான் இந்த விமானத்தின் பெறுமதி. இவ்வாறு இருக்கையில், பழைய விமானங்களை பயன்படுத்தி இன்னமும் உயிர்களை பலி கொடுக்கவா அரசாங்கம் முற்படுகிறது?” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை