க.பொ.த. சாதாரண தர பரீட்சையை தரம் 10 இல் நடத்த நடவடிக்கையாம்! கல்வி அமைச்சர் சுசில் கூறுகிறார்
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது அது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிவரும் காலங்களில் மேற்கொள்ள இருக்கும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
நிகழ்காலத்துக்கு ஏற்றவகையில் கல்வித்துறைiயில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
தற்போது இருக்கும் கல்வி நடவடிக்கைகள் நவீன தொழிநுட்பத்துக்கு ஏற்றவகையிலும். தொழில்சார் கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இதில் மாற்றங்களைச் செய்ய இருக்கிறோம்.
அதன் பிரகாரம் பாடசாலைகளில் இடம்பெறும் தவணைப்பரீட்சைகளை இல்லாமலாக்கி, வருட இறுதியில் பரீட்சை நடத்தவும் மாணவர்ளின் செயற்திறமைகள், பாடசாலைக்கான வருகை போன்ற விடயங்களையும் கணிப்பிட்டு இறுதிப்பரீட்சை பெறுபேறுடன் ,சேர்ப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்.
அத்துடன் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையை 10ஆம் தரத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது அது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். சாதாரண தர பரீட்சை ஆரம்ப காலத்தில் 10ஆம் தரத்திலேயே இடம்பெற்றது.
பிற்காலத்தில் அது 11ஆம் தரம் வரை ஒரு வருடத்தால் முன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கல்வி மறுசீரமைப்பின் கீழ் 10 ஆம் தரத்தில் சாதாரண தர பரீட்சையை நடத்த முடியுமா சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி வருகிறோம்.
புதிய கல்வி மாற்றத்தின் மூலம் உயர் தர பரீட்சைக்குத் தோற்றியதன் பின்னர், மாணவர்கள் தங்களின் எதிர்கால இலக்கை தெரிவுசெய்துகொள்வதற்கான சுயாதீன நிலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையை தயாரித்துக்கொள்ள வேண்டும்;. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை