செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்;! கண்ணீரில் தோய்ந்தது வள்ளிபுனம்
விஜயரத்தினம் சரவணன்
செஞ்சொலைப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் முகாமைத்துவ கற்கைநெறியில் ஈடுபட்டிருந்த 53 மாணவியர்களும், நான்கு பணியாளர்களும் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களுடைய 17ஆம் ஆண்டு நிவேந்தல் இன்று முல்லைத்தீவு வள்ளிபுனம்பகுதியில் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.
தாயக மற்றும், புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன், தாய்த்தமிழ் பேரவையின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஆரம்பமானது.
அந்தவகையில் இந்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர் நீத்த உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவியர்களான கனகலிங்கம் நிருஷா, கனகலிங்கம் நிருபா ஆகிய சகோதரிகளின் தாயார் கனகலிங்கம் தவமணி பொதுச்சுடரை ஏற்றிவைத்தார்.
இந் நிகழ்வில் தொடர்ந்து படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவியர்களுக்கும், பணியாளர்களுக்கும் அவர்களுடைய உறவினர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி, கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்று, பொதுமக்களின் மலர்வணக்கம் என்பனவும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், சமூக செயற்பாட்டாளர்கள், படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை