ஜம் இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்! முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு

 

நூருல் ஹூதா உமர்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனை கிளை உறுப்பினர்களுக்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸூடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு கல்முனை பள்ளி வீதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை மக்கள் எதிர்நோக்கும் சமூக, சமய, கலாசார மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றியும் கல்முனையின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கல்முனையின் வளர்ச்சிக்காக அனைத்து தரப்பினர்களும் கருத்து வேறுபாடுகளை தவிர்ந்து ஒன்றிணையும் அவசியத்தை வலியுறுத்தியும், போதைவஸ்து பாவனையால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் பின்னடைவுகள், சமூக கலாசார ஒழுக்க விழுமியங்களின் சீரமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தக்க தீர்வை பெற்றுத்தருவதாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளையின் நலத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு நல்குவதாகவும், தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உலமாக்களுக்கு உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளையால் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் தொனிப்பொருளில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.