நாவலடிக் காணிகளில் இருந்த ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டமை இனவாத நடவடிக்கை! ஹரீஸ் எம்.பி. கண்டனம்

 

நூருல் ஹூதா உமர்

கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்வீக முஸ்லிம் கிராமங்களையும், குடியிருப்புக்களையும் கொண்டு வாழும் முஸ்லிங்கள் அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றமை இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் நன்றாக தெரியும். மட்டக்களப்பு வாழ் முஸ்லிங்களின் சனத்தொகைக்கும் அவர்கள் வாழும் காணிகளின் அளவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. காணி விடயத்தில் பாரிய சிக்கல்களை சந்தித்து வரும் ஒரு சமூகமாகவே மட்டக்களப்பு மாவட்டம் வாழ் முஸ்லிங்கள் வாழ்கின்றனர் என நாவலடி காணி விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் நாவலடி காணி விவகாரம் தொடர்பிலான அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக வெளியீடொன்றை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் –

நாவலடியில் அத்து மீறி அடாவடித்தனமான முறையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் செயற்பட்டிருக்கின்றமை கண்டித்தக்கதாகும். இவ்வளவு நாளும் பசுத்தோல் போத்திய புலியாக முஸ்லிங்களின் அனுதாபி போன்ற தோரணையில் செயற்பட்ட ஒருவர் பகிரங்கமாகவே முஸ்லிங்களுக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் அவரின் சாயம் வெளுத்துள்ளது. ஏழை,எளிய மக்களின் காணியுரிமையை இல்லாமல் செய்கின்ற இந்த அத்துமீறிய நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தக் காணி விவகாரம் தொடர்பில் அரச உயர்மட்டங்களுக்கு எடுத்துச்சென்று மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அவலநிலையை அவர்களுக்கு விளக்கி தீர்வை கோரத் தயாராக உள்ளத்துடன், எமது முஸ்லிம் கட்சி தலைவர்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ள 13 ஆம் திருத்தம் சம்பந்தமான விடயங்களில் நாவலடியில் சாணக்கியன் போன்றோர்கள் நடந்து கொள்ளும் விடயங்களை கவனத்தில் கொண்டு முஸ்லிங்களின் இருப்புக்கு நிலையானதும், ஆதரவானதுமான தூரநோக்கு சிந்தனை கொண்ட முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.