தமிழர்களுக்குப் பல வீரவரலாறுகள் உள்ளன பிரபா எத்தகைய வீரன் என்பதை உலகறியும்;! மேர்வினின் கருத்து வேடிக்கையானது என்கிறார் ரவிகரன்
விஜயரத்தினம் சரவணன்
தமிழர்களுக்கென பல தனித்துவமான வீரவரலாறுகள் உள்ளனவெனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எத்தகைய வீரன் என்பதை இந்த முழு உலகும் அறியும் எனவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேர்வின் சில்வா தமிழர்களின் தலைகளை களனிக்கு எடுத்துச் செல்வதாக கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றமை வேடிக்கையாக இருப்பதாகவும், முதலில் தமிழர்களின் வீர வரலாறுகள் எத்தகையது என்பதை மேர்வின் சில்வா மற்றும் சரத் வீரசேகர போன்றவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
செஞ்சோலைப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –
இலங்கை அரசினுடைய கோர முகம்வெளிப்பட்ட நாள் இன்றாகும். அப்பாவிப் பாடசாலை மாணவர்கள் மீது இந்த அரசு படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட நாள் இன்றாகும்.
குண்டுகளால் பாடசாலை மாணவர்களது வெண்ணிறச் சீருடை குருதியால் நனைந்து சிவப்பாகியதுடன், மாணவர்களது உடல்கள் துண்டுதுண்டாக்கப்பட்டன.
இவ்வாறான கொடூரமான ஆட்சியாளர்கள் உள்ள நாட்டில்தான் நாம் வாழ்கின்றோம்.
கடந்த 2009 இற்குப் பிற்பாடு நிலப்பறிப்பு, மதத்திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் ஊடாக இன அழிப்புச் செயற்பாடுகளைத் தற்போதும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந் நிலையில் தமிழர்களுடைய தலைகளைக் களனிக்கு கொண்டு செல்லப்போவதாக மேர்வின் சில்வா அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதேபோல் சரத் வீரசேகர என்பவருடைய சர்ச்சைக்குரிய பல கருத்துக்களையும் நாங்கள் காண்கின்றோம்.
இவ்வாறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தமிழர்களுடைய வீர வரலாறுகள் எத்தகையது என்பதை முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.
அந்த வீரவரலாறுகளின் வரிசையில்வந்த தலைவர் பிரபாகரன், எத்தகைய தலைசிறந்த வீரர் என்பதை இந்த முழு உலகமும் அறியும்.
இவ்வாறு எமது வீர வரலாறுகள் இருக்கும்போது எமது தலைகளை களனிக்கு எடுத்து செல்லப்போவதாக கருத்துக்களை வெளியிடுகின்றமை மிகவும் வேடிக்கையானது.
இவ்வாறான அரக்க குணமுடையவர்களை வைத்தே இந்த அரசு ஆட்சி நடத்துகின்றது.
இந்த மேர்வின் சில்வா என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் அமைச்சராக இருந்தவராவார்.
அதேபோல சரத் வீரசேகர இந்த ஆட்சியில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு, முன்பு அமைச்சராகவும் இருந்தவராவார்.
அனைத்து பெரும்பாண்மையின மக்களையும் நாம் குறைகூறவில்லை. பெரும்பாண்மையினத்தைச் சேர்ந்ந பல அறிஞர்கள், புத்திஜீவிகள் இருக்கின்றனர்.
இவ்வாறான கொடூர மனம் படைத்தவர்களைப் பெரும்பாண்மை மக்கள் ஓரங்கட்டவேண்டும்.
தமிழர்கள் நாங்கள், எம்மை நாமே தீர்மானிக்கக்கூடிய தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறு விமானக்குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவி மாணவர்களுக்குத் தலைசாய்த்து எனது உளப்பூர்வமான அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த அப்பாவி மாணவர்களுடைய பெற்றோர்கள் இங்கு குமுறிக் குமுறி அழுவதை இங்கே காண முடிந்தது. இந்தப் பெறறோருடைய கண்ணீருக்கு இந்த அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் – என்றார்.
கருத்துக்களேதுமில்லை