வீதிப் பெயர்ப்பலகையில் சிங்கள மொழி தவறாக அர்த்தத்தை கொடுத்துள்ளது! பாதிக்கப்பட்டவர்களிடம் தவிசாளர் நிரோஷ் மன்னிப்புக்கோருகின்றார்
தனது பதவிக்காலத்தில் இடப்பட்ட பெயர்ப்பலகையில் சிங்கள மொழி தவறாக இடம்பெற்றமையால் அந்தப் பிழையான அர்த்தத்தால் சிங்கள சகோதரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்குத் தானாக முன்வந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதுடன் உரிய திருத்தத்தை மேற்கொள்ளவும் பிரதேச சபை செயலாளரிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –
எம்மால் புனரமைக்கப்பட்ட கோப்பாய் பகவான் பாதைக்கான வீதியின் பெயர்ப்பலகையில் காணப்பட்ட சிங்கள மொழியில் தவறு காரணமாக அது பிழையான அர்த்தத்தை சிங்கள மொழியில் வெளிப்படுத்தியது. இது சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டிருந்ததுடன் சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பலரும் முகப்புத்தகத்தில் கவலை தெரிவித்திருந்தனர். இதனை சமூக செயற்பாட்டாளர் விஸ்வநாதன் ஆதித்தன் எனது கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இதனையடுத்து தான் சிங்கள மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக விமர்சனத்தில் உண்மையுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளேன். எனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் பிரதேச சபை செயலாளர் இராமலிங்கம் பகிரதனின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன் பிரதேச சபை நடவடிக்கையை எடுப்பதற்கு வசதியாக முதற்கட்ட கருமமாக அங்கு காணப்பட்ட தவறான அர்த்தத்தில் காணப்பட்ட சிங்கள பதத்தை மறைத்துள்ளதுடன் இயன்ற விரைவில் குறித்த பெயர்ப்பலகை பிரதேச சபையால் மாற்றியமைக்கப்படவுள்ளது.
இந்தப் பெயர்ப்பலகை எனது பதவிக்காலத்தில் இடப்பட்டதன் அடிப்படையில் இதனால் பாதிக்கப்பட்ட சகோதர மொழி மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கின்றேன். நாம் தமிழராக இந் நாட்டில்; வரலாற்று ரீதியில் எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்டது என்பதையும் ஒடுக்கப்படுகின்றது என்பதையும் நான் நன்கு அறிவேன். இன்றும் நாட்டில் தமிழ் மொழி எந்தளவு தூரம் அரச கரும மொழிச் சட்டங்களுக்கு அமைய பரிபாலிக்கப்படவில்லை என்பதையும் எமது மொழி பல இடங்களில் தூசணமாகக் கூட அர்த்தப்படுத்தல் இடம்பெற்றுள்ளதை கண்டு அவற்றுக்கு எதிராக நான் செயற்பட்டும் இருக்கின்றேன்.
இந் நிலையில் விமர்சனங்களை முன்வைப்போரின் ஆதங்கத்தை மதிக்கின்றேன். எமது பதவிக் காலத்தில் இடப்பட்ட பகவான் பாதைக்காக பெயர்ப்பலகையில் காணப்பட்ட பதமும் தவறான சிங்கள அர்த்தப்படுத்தலுக்கே உரியது என்பதை இன்று தெரிந்து கொண்டேன். கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக பகிரங்க வெளியிலும் இந்தப் பெயர்ப்பலகை காணப்பட்டுள்ளது. இது வருந்தத்தக்கது.
இதுபற்றிய தவறு சுட்டிக்காட்டப்பட்டவுடன் அரச உத்தியோகத்தார்கள் செயற்பட்டுள்ளார்கள். எமது மொழி பயன்பாட்டுத் தவறு காரணமாக இந்த விடயத்தில் பாதிக்கப்படும் ஒவ்வொரு சிங்கள சகோதரர்களிடத்திலும் நான் மன்னிப்புக்கோருகின்றேன். இதேவேளை வடக்குக் கிழக்கிற்கு வெளியே தமிழ் மொழி அழுலாக்கம் மற்றும் தவறான அர்த்தப்படுத்தல்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை அவசியம் என்பதையும் அதற்கெதிராகப் போராடுவதற்கும் முற்போக்காளர்களை வலியுறுத்துகின்றேன். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை