தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை மூடப்படும் அபாயம்!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 15 – 20 கோடி ரூபா பெறுமதியான சி.ரி. சிமிலேற்றர் என்ற இயந்திரம் பழுதடைந்தமையால் புற்றுநோயாளர்கள் பெரும் அவலத்தை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் புற்றுநோயாளர்களுக்கான ஒரே வைத்தியசாலையாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது. அனுராதபுரம், புத்தளம், சிலாபம் போன்ற பிரதேசங்களில் இருந்தும் இங்கு சிகிச்சைக்காக ஏராளமான நோயாளர்கள் வருகைதருகின்றார்கள்.\
இந்த சிரிசிமிலேற்றர் இயந்திரம், புற்றுநோயின் பரவல், அதன் அளவு, தாக்கம் என்பவற்றை முப்பரிமான ரீதியில் அளவிடக்கூடிய கருவி. இந்த ஸ்கானின் முடிவை வைத்தே நோயாளர்களுக்கு வைத்தியநிபுணர்கள் என்ன கால இடைவெளி, எவ்வளவு வீரியம் என்பவற்றை அறிந்து அதற்குரிய சிகிச்சைகளை வழங்குவார்கள்.
இந்த இயந்திரத்தின் மூலமே புதிய நோயாளர்களையும் இனங்காணமுடியும்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு இந்த இயந்திரம் வந்தபோதே மாகாணசபை நிர்வாகம் இந்த இயந்திரத்தைப் பராமரிப்பதற்குரிய வலு தம்மிடம் இல்லை என மத்திய அரசிடம் கையளித்துள்ளது. இந்த இயந்திரத்தைச் சீர்செய்ய 20 லட்சம் ரூபா வரையில் நிதி தேவைப்படும்.
மத்திய, மாகாண அரசுகளின் அசமந்தப் போக்கால் புற்றுநோயாளர்கள் பெரிதும் அவதிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை