ஹோமாகம தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!

ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள இரசாயன களஞ்சியசாலையொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து, பாரிய சிரமங்களை அடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் இரசாயன களஞ்சியசாலை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, பல கிலோ மீற்றருக்கு புகை பரவியதையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து குறித்த களஞ்சியசாலைக்கு அருகில் வசிக்கும் பிரதேச வாசிகள் சிலர் அங்கிருந்து உடனடியாக வேறு இடங்களுக்கு வெளியேறினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பாக தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வருகைத் தந்து, தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.

கோட்டே நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் ஹொரணை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினருமே குறித்த பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும், தீப்பரவலை கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தத் தீ விபத்தினால், தொழிற்சாலையின் இரண்டு கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தீப்பரவலானது பல மணிநேரப் போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.30 அளவில் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் குறித்த பகுதியில் வளி மாசடந்துள்ளமையால், முகக் கசவங்களை அணியுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.