13 திருத்தம் தொடர்பில் சஜித் இரட்டைவேடமாம்! பிரபாகணேசன் சாடுகிறார்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 13 ஆவது திருத்தம் தொடர்பில் இரட்டை வேடம்போடுவதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு,  பம்பலப்பிட்டியிலுள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையில் உள்ளூராட்சி சபைத்  தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது மக்களின் வாக்குரிமையைப்  பறிக்கும் செயலாக இருப்பதோடு அது மனித உரிமையை  மீறும் செயலாகவும் பார்க்கப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது  இந்திய அரசாங்கம் அவரிடம்  13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறும், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தியிருந்தது.

மாகாண சபைத் தேர்தல் என்று கூறும் போது  காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி இன்று பேசிக்கொண்டிருக்கின்றார்.

வடக்கு, கிழக்கைச் சார்ந்த தமிழ்க் கட்சிகளை அழைத்து மாகாண சபைத் தேர்தலில் பொலிஸ், காணி அதிகாரம் சம்பந்தமாகப் பேசுகின்றார் என்றால்  உண்மையிலேயே ஏற்கனவே அவர்களுக்கு சொல்லி வைத்ததுபோன்று வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் பொலிஸ், காணி அதிகாரங்கள் தமக்கு வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கின்றார்கள். இது ஜனாதிபதி எதிர்பார்த்த ஒன்றாகத்தான் நான் பார்க்கின்றேன்.

அதேபோல் தென்னிலங்கையில் சரத் வீரசேகர போன்றவர்களிடம் பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் கேட்கின்றார்கள் என்று சொல்லும்போது அவர் பௌத்த ஆலயங்களுக்குச் சென்று வேறுவிதமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

ஆகவே,  ஜனாதிபதி  ரணில் இவ்வாறான பிரச்சினைகளை உருவாக்கி தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

இந்நிலையில் ஜனாதிபதியிடம் நாங்கள்  ஒன்று கூறிக்கொள்ள  விரும்புகின்றோம், ‘முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள். அதற்கு பின்பு பொலிஸ், காணி அதிகாரங்களை பேசலாம். ஏனெனில் ,  கடந்த காலங்களில் இருந்த மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

ஆகவே,  முதலில் தேர்தலை நடத்திவிட்டு பின்பு அனைத்து கட்சிகளையும் அழைத்து பொலிஸ், காணி அதிகாரங்கள் சம்பந்தமாக பேச்சு நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம். தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் எடுக்காமல், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேடதாரிபோல் நடந்துகொள்கின்றார். நாடாளுமன்றத்தில் சொல்கிறார் தாம் 13 இற்கு ஆதரவாக இருக்கின்றோம் என்று, அதேநேரம் மகா சங்கத்தினரை சந்தித்து அங்கே 13 ஆம் திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் சம்பந்தமாக நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்கிறார்.

எனவே இவ்வாறு இரட்டை வேடம் போடுவதை நிறுத்திவிட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். – இவ்வாறு பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.