நரேந்திர மோடியிடமிருந்து பாடத்தை கற்றுக்கொள்க! லக்ஷ்மன் கிரியெல்ல இடித்துரைப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னுதாரணமாகக் கொண்டு, ஜனாதிபதி செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
மொட்டுக் கட்சியின் அரசாங்கம் தான் இந்த நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்றது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இன்று பிற்போடப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு பயந்த ஓர் அரசாங்கத்தால் நாட்டை நிர்வகிக் முடியுமா? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து இவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில், 5 மாநிலங்களுக்கும் அவர் தேர்தலை நடத்தினார். இவற்றில் அவர் தோல்வியடைந்தார்.
பின்னர் கொரோனாவை சரியான முறையில் கட்டுப்படுத்தி, நாட்டை முன்னேற்றிவிட்டு மீண்டும் மாநிலங்களுக்கு தேர்தலை நடத்தினார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார்.
ஓர் அரசியல் தலைவர் என்றால் இப்படிதான் சவால்களை எதிர்க்கொள்ள வேண்டும்.
மாகாணசபைத் தேர்தலை நடத்த, எந்த பிரேரணையைக் கொண்டுவந்தாலும் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ஆதரவளிப்போம் என்று ஜனாதிபதியிடம் உறுதியளித்திருந்தோம்.
ஜனநாயகம் இல்லாத ஒரு நாட்டுக்கு சர்வதேசம் உதவ முன்வராது. ஐ.எம்.எப். எமக்கு உதவி செய்தாலும், ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசாங்கம் எவ்வாறு செயற்படுகிறது என்பதை அவர்கள் தீவிரமாக அவதானித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
இது அவர்களின் நிபந்தனைகளில் ஒன்றாகவும் இருக்கிறது. எனினும், அரசாங்கம் இந்த நிபந்தனையை மீறித்தான் தற்போது செயற்பட்டு வருகிறது. – என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை