ஐ.தே.கட்சியின் சம்மேளனம் ஜனாதிபதி ரணில் தலைமையில்! செயற்குழுவில் தீர்மானம்
ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் அனைவரையும் இணைத்துக்கொள்ளும் வகையில் கட்சியின் யாப்பில் திருத்தம் மேற்கொள்ள இருக்கிறோம் என கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கட்சியின் தலைமையமான சிறிகொத்தவில் இடம்பெற்றது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
ஐக்கிய தேசிய கட்சியின் கட்சி சம்மேளனத்தை நடத்துவதற்கான கட்சியின் செயற்குழுவின் அனுமதியை பெற்றுக்கொள்ளவும் சம்மேளனத்தின்போது கட்சி யாப்பில் மேற்கொள்ள இருக்கும் திருத்தங்கள் தொடர்பில் செயற்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தவும் கட்சியின் செயற்குழு 17 ஆம் திகதி மாலை கூடியது.
அதன் பிரகாரம் கட்சியின் 56 ஆவது வருடாந்த மகா சம்மேளனத்தை செப்ரெம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு லேக்ஹவுஸுக்கு எதிரே அமைந்திருக்கும் கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் கட்சி யாப்பு திருத்தத்தின் போது, கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குள் வந்து செயற்பட முடியுமான வகையிலும் தேர்தல் காலத்தில் வேறு கட்சிகளை கூட்டிணைத்துக்கொண்டு போட்டியிட முடியுமான வகையிலும் மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
போராட்டத்தின் போது மக்கள் மாற்றத்தை வேண்டி இருந்தார்கள். அந்த மாற்றத்தை புதிய வடிவத்தில், புதிய வேலைத்திட்டத்துடன் முன்னெடுக்கவே ஐக்கிய தேசிய தற்போது முயற்சிக்கிறது. அதற்கான ஆரம்பமே கட்சி சம்மேளனத்தின் மூலம் முன்னெடுக்க இருக்கிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை