இனத்தை ஒருங்கிணைக்கும் தளமே சனசமூக நிலையம்! முன்னாள் தவிசாளர் நிரோஷ் கூறுகிறார்
கிராமங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் புலம்பெயர்ந்தவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் ஒன்றிணைந்து பயணிப்பது இனத்தின் நலன்களை மையப்படுத்திய உத்தியாகும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
அச்சுவேலி மத்திய சனசமூக நிலையத்;துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –
எமது மண்ணில் நல்ல பல மாற்றங்களுக்கு அடிப்படையாக கிராம அமைப்பை வலுப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.
எமது கிராம கட்டுமானங்களின் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக நிலத்திலும் புலத்திலும் வாழும் உறவுகள் கைகோர்த்து கிராமம் என்ற வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது.
ஒரு கிராமத்தின் ஒருங்கிணைவு சனசமூக நிலையங்களிலேயே தங்கியுள்ளது. சனசமூக நிலையத்தின் ஒருங்கிணைவு இனத்தின் ஒருங்கிணைவாக அமைகின்றது.
போரின் தாக்கம் காரணமாக எம்மில் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துவிட்டனர். இது உள்நாட்டில் எமது ஜனநாயக பலத்தைப் பாதித்துள்ளது.
இந்நிலையில் மேலுமொரு கோணத்தில் புலர்பெயர்ந்தோரின் வளத்தை எவ்வாறாக எமது அரசியல் பொருளாதார, கலாசார, சமூக இருப்பிற்காக தகவமைக்க முடியும் என்பதை இனம் சார்ந்த அக்கறையுடன் சிந்தித்து செயற்படுத்த வேண்டும்.
அவ்வாறான அறிவார்த்தமான முயற்சிகளில் ஒன்றே இன்று இந்த அச்சுவேலி மண்ணில் நிறைவேறியுள்ளது.
ஒரு சனசமூக நிலையம் கிராமத்தின் கட்டமைப்பை தகவமைக்கும் நிலையம் என்ற அடிப்படையில் கல்வி, பொருளாதாரம் என சகல அம்சங்களிலும் முன்னிலையில் உள்ள இந்தக் கிராமத்தில் தொடந்து மேம்பாட்டை தக்கவைப்பதற்கு இந் நிலையம் அடிப்படையாக அமையும்.
பொதுவாக புத்திஜீவிகள் பொதுப்பணிக்கு வருவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. இச் சூழ்நிலையில் இங்கு எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருண் செல்லப்பா போசகராக சனசமூக நிலையத்தை நிலத்திலும் புலத்திலுமாக ஒருங்கிணைக்கின்றார்.
அதுபோன்று ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் தலைமை தாங்குகின்றார்.
செயலாளராக நடேசு இரவீந்திரன், பொருளாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவகுமார் பிரதீபா என ஒரு கல்விப்புலம் பொதுப்பணி களத்தில் நிற்கின்றமை மகிழ்ச்சிக்குரியது.
இந் நிலையத்தின் ஏனைய செயற்பாட்டாளர்களும் பல் துறைசார்ந்தவர்களாக இருக்கின்றனர். கல்வியியலாளர்கள் சமூக செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கும் துர்ப்பாக்கிய நிலையில் இவ்விடயம் ஏனைய படித்தவர்களுக்கு முன்னுதாரணமாக அமையவேண்டும் என இங்கு கோடிட்டுக்காட்டுகின்றேன் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை