கிழக்கில் வாழும் சமூகங்களின் அடையாளங்களை பிரதிபலிப்பதாக மாகாணக் கொடியை அமைக்குக! கிழக்கு ஆளுநருக்கு ஹரீஸ் எம்.பி. வேண்டுகோள்
நூருல் ஹூதா உமர்
கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் கலாசார விடயங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபையின் கொடி சீர்செய்யக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா. பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்று மாகாணத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை முன்னெடுத்துவரும் பணியின் மற்றுமொரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இன மக்களதும் அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு மாகாண கொடி திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவை முன்வைத்துள்ளார். மேலும், வடக்கு, கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த ஆளுநர் ஒருதலை பட்சமாக மக்களின் அபிப்பிராயங்களோ, அதிகாரிகளின் ஆலோசனைகளோ பெறாமல் இனவாத சிந்தனையில் இப்போதுள்ள கிழக்கு மாகாணக் கொடியை உருவாக்கியுள்ளார் என்றும் அதில் கிழக்கில் வாழும் சமூங்கங்களின் அடையாளங்கள் இல்லாதிருப்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் வடமாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள வடமாகாண கொடி அந்த மாகாணத்தில் வசிக்கும் சகல இனங்களினதும் அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
எனவே சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஆளுநர் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல சமூகங்களையும் குறிப்பாக மாகாணத்தில் 40 சதவீதமளவில் வாழும் முஸ்லிங்களின் கலாசாரத்தை பிரபலிக்கும் எவ்வித அடையாளமும் இந்த கொடியில் உள்ளடக்கப்படவில்லை மட்டுமின்றி ஆகக்குறைந்தது முஸ்லிங்களை அடையாளப்படுத்தும் வகையில் நிறம் கூடப் பிரதிபலிக்கவிலை என்பதை கவனத்தில் கொண்டு மட்டுமின்றி இந்த விடயமானது நீண்டகாலமாக முஸ்லிம் சமூகத்தை வேதனைக்கு உட்படுத்தியுள்ளது என்பதையும் மனதில் கொண்டு இந்த கொடி விடயத்தில் கவனம் செலுத்தி சீர்செய்ய உடனடியாக முன்வரவேண்டும் என்று அந்த கடிதத்தில் ஆளுநரை கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை