ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி நகர்த்தமுடியும்! விஜயகலா மகேஸ்வரன் இறுமாப்பு
ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நாடு பூராகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
அதன் ஓர் அங்கமாக யாழ். மாவட்டத்திலும் கட்சியின் செயலாளரின் பங்குபற்றுதலுடன் வட்டுக்கோட்டை தொகுதியிலும் இடம்பெறுகின்றது.
தற்போது ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதாவது, வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் மக்களின் வாக்கில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவில்லை.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிட்டிருந்தார்.
அந்த காலத்தில் வடக்கு மக்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அதன் காரணமாக தற்போதைய ஜனாதிபதியும் எமது கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளால் தோல்வியுற்று இருந்தார். அதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டும் போட்டியிட்டிருந்தார்.
வருகின்ற ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடவுள்ளார் போட்டியிட்டு உண்மையிலேயே அமோக வாக்குகளை பெற்று நாட்டை முன்னோக்கிகொண்டு போவதற்கு உங்களுடைய போதிய ஒத்துழைப்பை வேண்டி தான் இந்த கட்சி மறுசீரமைப்பு தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்றது.
அந்த ஒரு நோக்கத்தோடும் அதற்கும் அப்பால் இந்த நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு நமது கட்சித் தலைவரிடம் உள்ளது.
எனவே, வடக்கில் உள்ள மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் தலைவருக்கு அமோக வாக்களித்து அவரை வெற்றியடைய வைப்பதன் மூலமே எமது நாட்டை முன்னேற்றிக் கொள்ள முடியும்.
தற்போதுள்ள நிலையில் எமது கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் அமோக வாக்களித்து வெற்றி அடைய வைத்தோம்.
ஆனால் அவரது ஆட்சியின் இறுதிக்காலத்தில் அரசியல் சூழ்ச்சியை செய்து நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்திய போதிலும் அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கதான் அந்த நிலைமையில் கூட நாட்டை சுமுகமான நிலைக்கு கொண்டு வந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின்போது நாடு பொருளாதார ரீதியில் படுகுழிக்குள் தள்ளப்பட்டு இருந்தது பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செல்வதில் கடும் இன்னல் பட்டிருந்தபோது தனி மனிதனாக நின்று இந்த நாட்டைப் பொறுப்பெடுத்து இன்று வரிசை நிலைமையை மாற்றி மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சிக்கல் இன்றி முன்னெடுப்பதற்கான சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார்.
அதேபோல எங்களுடைய தலைவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வந்தால் வடக்கு பகுதியில் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களை கட்டாயமாக நிறைவேற்றுவார்.
அதேபோல இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மூன்று நேர உணவைக் கூட உண்ண முடியாத நிலையில் மக்கள் வாழ்கின்றார்கள். கடந்த காலங்களில் நாங்கள் விட்ட பிழைகளை விடாது எமது கட்சி தலைவரை ஜனாதிபதி ஆக்குவதற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அத்தோடு எமது ஐக்கிய தேசிய கட்சியைப் பலப்படுத்துவதன் மூலம் வடக்கு மக்கள் மாத்திரமல்லாது இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ முடியும். அதேபோல எதிர்வரும் 10 வருடங்களுக்குள் இந்த நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வரக்கூடிய வழி வகைகள் ஏற்படும்.
எனவே, தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்குவதற்கு அமோக வாக்களித்து தங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். – என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பு செய்யும் வேலை திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்க பண்டாரவின் பங்கு பற்றுதலோடு வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசிய கட்சி மறுவீரமைப்பு அலுவலகத்தில் இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதோடு பாடசாலை மாணவர்களுக்கு உதவி பொருள்களும் வழங்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை