அரசின் நீண்டகால நிகழ்ச்சி நிரலிற்கு மறவன்புலோ சச்சி துணைபோகிறார்! அம்பிகா சற்குணநாதன் சாட்டை
சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன் குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சாடியுள்ளார்.
ருவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –
குருந்தூர் மலையில் இடம்பெறுவது தனியான ஒரு சம்பவமில்லை மாறாக வடக்கு, கிழக்கின் குடிசனப்பரம்பலை மாற்றுவது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது உட்பட பல நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு நீண்டகால தந்திரோபாயமே அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக தொல்பொருள்திணைக்களம் இராணுவம் பௌத்தமதகுருமார்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்துவலதுசாரி அமைப்பான சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன் போன்றவர்கள் அரசாங்கத்தின் இந்த மூலோபாயத்தை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கின்றனர் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுக்களுக்கு ஆதரவளித்து கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் தமிழர்கள் இதனை கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்களை இந்த விடயம் பாதிக்காது எனக்கருதும் இந்த விடயம் குறித்து கரிசனையற்றவர்கள் பௌத்தமதகுருமார் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதையும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையும் கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இது நீதித்துறையின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்படாத நீதி அமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை