மலையக மக்கள் உரிமைக்காக போராடுவது வடக்கு,கிழக்கு தமிழர்களின் கடமையாகும்! செல்வம் அடைக்கலநாதன் இடித்துரைப்பு

 

விஜயரத்தினம் சரவணன்

மலையக மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும், போராடுவதும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் கடமை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வௌ;வேறு இடங்களில் இருந்தாலும் உர்வுகளாலும், மொழியாலும் நாம் ஒன்றுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு’ எனும் வரலாற்று நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்திலே ஈழ விடுதலைப் போரிற்காக பல மலையக இளைஞர்கள் பெரும்பங்காற்றியிருந்த இடத்தில் நினைவு படுத்த விரும்புகின்றேன்.

வடக்கின் பல எல்லைக் கிராமங்கள் தற்போதும் தக்கவைக்கப்பட்டிருக்கின்றமைக்கு, அந்த எல்லைக்கிராமங்களில் குடியேற்றப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மலையக மக்களே காரணமாவர். மலையக மக்களாலேயே பல எல்லைக்கிராமங்கள் தற்போது சிங்கள மயமாக்கலில் இருந்து பாதுகாக்கப்படுகின்றது.

இடங்கள்தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என்பதை பல சந்தர்ப்பங்களிலே மலையக மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.

மலையக மக்கள் ஒரு தேசிய இனம். அந்தத் தேசிய இனத்துக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளைத் தட்டிக் கேட்கவேண்டிய பொறுப்பும், கடமையும் எமக்கிருக்கின்றது.

மலையகமக்களின் அனைத்து விடயங்களும், எம்மோடு ஒன்றிணைந்து ஒத்துப்போகின்ற சூழல், நாம் அனைவரும் ஓர் இனம் என காட்டி நிற்கின்ற நிலையிலே அந்த மக்களுக்குரிய விடுதலையைப் பெற்றுக்கொடுக்கின்ற கடமையும் பொறுப்பும் எமக்கிருக்கின்றது.

மலையக மக்கள் இந்த நாட்டின் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் இந்த நாட்டில் வாழ்வதற்கான அனைத்து உரித்தும் அந்த மக்களுக்கு இருக்கிறது.

அவர்களுக்கு இங்கு நிலமில்லை. ஆனால் இந்த மண்ணைப் பாதுகாக்கப் போராடுகின்றனர்.

அவர்களுக்கு முறையான வேதனம் இல்லை. அவர்களுக்குரிய முறையான வேதனத்தைப் பெற்றுக்கொடுக்க அரசியல் தலைவர்கள் முயன்றாலும் இந்த அரசாங்கம் இடங்கொடுப்பதில்லை.

ஆகவே தேயிலைக் கொழுந்துகளை எடுத்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவேண்டிய தேவை எமது மக்களுக்கு இல்லை.

மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதும், மலையக மக்களின் உரிமைகளுக்காக அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடுவதும், அவர்களுக்கான பங்களிப்புக்களைச் செய்வதும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய கடமை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.