இலங்கை போக்குவரத்துச் சபை நாளாந்தம் ஒருகோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது! போக்குவரத்து அமைச்சர் பந்துல

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் வருமானத்தை பகிர்ந்துக் கொள்வதால் சபை பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. போக்குவரத்து சபை நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

இலங்கை போக்குவரத்து சபைக்கு கிடைக்கப் பெறும் நாளாந்த வருமானத்தை அரச பஸ்களின் சாரதிகளும், நடத்துநர்களும் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இந்த நிதி மோசடியால் இலங்கை போக்குவரத்து சபை பாரிய நிதி நெருக்கடி எதிர்க்கொண்டுள்ளது.

சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் நிதி மோசடியால் இலங்கை போக்குவரத்து சபை நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது. இதுவும் ஒருவகையான அரச நிதி மோசடியே இந்த முறைகேடு தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடளித்துள்ளேன்.

இந்த நிதி மோசடி குறித்து ஆராய 12 நடமாடும் சுற்றிவளைப்பு சேவைகளை செயற்படுத்துமாறு போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அரச பஸ்களில் பயணிக்கும் போது பொது பயணிகள் நிச்சயம் பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். போக்குவரத்து சபைக்குள் இடம்பெறும் நிதி மோசடியை தடுக்காவிட்டால் இலங்கை போக்குவரத்து சபையை பாதுகாக்க முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.