ராஜபக்ஷர்களே நாட்டை அழிவுப் பாதைக்கு நகர்த்தினர் என்பதை மக்கள் மறக்கவில்லை! அஜித் மன்னம்பெரும சுட்டிக்காட்டு
நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷர்கள் இன்று கிராமம் சென்று அரசியல் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் தான் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றனர் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் –
நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றது யார் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் இதனை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு அமைச்சர்களும் தாம் செய்த மோசடிகளிலிருந்து தப்பித்து வெளிவருவதற்கு முன்னுரிமையளிக்கின்றார்களே தவிர , மக்களைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை.
காணி தொடர்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. மகாவலி காணியை விடுவிக்க வேண்டாம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மறுபுறம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தடுப்பதற்கு எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
பன்மடங்கு அதிகரித்துள்ள மின் கட்டணத்துக்கு தீர்வு இல்லை. தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தெற்கிற்கு மின்சாரத்தை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
பேராசிரியர்களும் ஆசிரியர்களும் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதை தடுக்க முடியாத கல்வி அமைச்சர் , கல்வி முறைமையை மறுசீரமைக்கவுள்ளதாகத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை