சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிப்பதற்கே முயற்சி : சஜித் பிரேமதாஸ!
சுகாதார அமைச்சரும், சுகாதார அமைச்சின் செயலாளரும் இணைந்து சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு சங்கங்களுடன் எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு இன்று நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துகளை ஒரே நேரத்தில் இறக்குமதி செய்து மக்களின் பணத்தை வீணடிக்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் நாட்டில் இயங்கிவரும் மருந்துப்பொருள் மாபியாவை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டிற்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாலான வெளிப்படையான, செயல்திறன் வாய்ந்த தேசியக் கொள்கை தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் செல்வாக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், இதற்காக நாடாளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ள முடியுமான அதிகபட்ச போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
முறையான கணக்கெடுப்பு இல்லாமல் செயல்படுத்தப்பட்டதால் அஸ்வெசும திட்டம் தோல்வியடைந்ததாகவும், இதே முறையை சுகாதாரத்துறைக்கும் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரத்துறையையும் அழிக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்நாட்டின் சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிக்கும் சதியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களை மரணப் படுக்கைக்கு இட்டுச் செல்லும் அரசாங்கத்துடன் கைகோர்க்கத் தயாராக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதன்போது, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை சட்டம் மற்றும் இலங்கை மருத்துவ கவுன்சில் சட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை