மக்களின் எதிர்ப்பை நாடாளுமன்றில் காண்பிக்கவே நம்பிக்கையில்லாப் பிரேரணை : திஸ்ஸ!

காதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு அப்பால், மக்களின் எதிர்ப்பினை நாடாளுமன்றுக்கு காண்பிக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை செப்டம்பரில் கொண்டுவர தீர்மானித்துள்ளோம்.

சிலர் கேட்கிறார்கள், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற செய்ய முடியுமா என்று.
இந்த பிரேரணையை வெற்றி பெற செய்வது அல்ல எமது நோக்கம்.

மாறாக மக்களின் எதிர்ப்பை நாடாளுமன்றில் காண்பிக்கவே, இந்தப் பிரேரணையை கொண்டுவந்துள்ளோம்.
ஏனெனில், சுகாதாரப் பிரச்சினையென்பது இன்று பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மருந்துத் தட்டுப்பாடுகள், தரமற்ற மருந்துகளின் பாவனை, சுகாதார திணைக்களத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், நோயாளர்களின் மரணங்கள் என பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை மட்டும்கொண்டுவந்து அரசாங்கத்திற்கு பாடத்தை புகட்ட முடியாது.
இதனால்தான், நாடளாவிய ரீதியாகவுள்ள அனைத்து பொது வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும், மக்களின் கையெழுத்து திரட்டும் பணிகளை தற்போத ஆரம்பித்துள்ளோம்.

இந்த நடவடிக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்கு இடம்பெறும். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக சுகாதார அமைச்சின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வினை காண வேண்டிய பொறுப்பு சுகாதார அமைச்சருக்கு மட்டுமன்றி, ஜனாதிபதிக்கும் உள்ளது.

எனினும், இதனை மேற்கொள்ள இவர்கள் தவறிவருகிறார்கள். இதனால், தற்போது உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும் நாம் முறைப்பாடளித்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.