வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ்- சுற்றுலாப் பணியக அதிகாரிகள் திடீர் சந்திப்பு!
வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், நேற்றைய தினம் (21) வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ”சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு வருகை தரும் கோர்டிலியா என்ற உல்லாசப்பயணக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விசேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது” தொடர்பில் இக்கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட காணி ஆணையாளர், யாழ் இந்திய துணைத்தூதுவர், வடமாகாண துறைமுக அதிகாரசபை தலைவர், வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலகர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளர், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலின் போது, ”இந்த உல்லாசப்பயணக்கப்பல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சென்னையிலிருந்து புறப்பட்டு அம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய துறைமுகங்களில் தங்கி வெள்ளிக்கிழமை காங்கேசந்துறை துறைமுகத்தை வந்தடைந்து மீண்டும் சென்னையைச் சென்றடைகின்றது. அவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாத நிலையே காணப்படுவதாக” வடமாகாண சுற்றுலாப் பணியகத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பயணிகளுக்குரிய அடிப்படை வசதிகள், உள்ளூர்ப் பயணங்களுக்குரிய வாகன ஒழுங்குகள், சுற்றுலா வழிகாட்டும் ஒழுங்குகள் என்பவற்றை செய்வதற்குரிய பொறிமுறைகள் தொடர்பாகவும் ஆளுநர், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.
கருத்துக்களேதுமில்லை