லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!
லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் முன்னிலையில், இன்று பிற்பகல் வரலாற்று சிறப்பு மிக்க மாத்தறை வெஹேரே ஸ்ரீ பூர்வராம விகாரையில் இடம்பெற்றிருந்தது.
சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
முப்பெரும் சங்கத்தின் அதி வணக்கத்திற்குரிய கௌரவ மாகாநாயக்க தேரர், முப்பெரும் சங்கத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்வு குழுவினால் இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அல்லிராஜா சுபாஸ்கரன் பிரித்தானியாவில் வாழும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஆவார்.
இவர் ஆசியாவின் மிகச்சிறந்த தொழிலதிபருக்கான தங்க விருது, “Voice of Asia” சர்வதேச தொழில்முனைவோர் விருது, Golden Peacock விருதுகளை பெற்றுள்ளதுடன், வணிக நிர்வாகம் மற்றும் தத்துவத்திற்கான கெளரவ கலாநிதிப் பட்டத்தை மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.
1972ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி முல்லைத்தீவில் பிறந்த இவர் லைக்கா நிறுவனத்தின் தலைவர் என்பதுடன், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற முதலீட்டாளரும் ஆவார்.
தகவல் தொடர்புத் துறையில் அழியாத புகழை ஏற்படுத்தியுள்ள சுபாஸ்கரன் அவர்கள், இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளாராகவும் இருந்து வருகிறார்.
2014இல் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளராக திரையுலகில் நுழைந்த அவர், பின்னர் 2018 இல் மிகப் பெரிய பொருட் செலவில் 2.0 படத்தை தயாரித்தார்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், பொன்னியன் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்திருந்ததுடன், சர்வதேச சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க ஆங்கிலம் அல்லாத மொழிப் படமாக உலகளவில் கொண்டுச் சென்றார்.
லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் ஊடாக சினிமா துறைக்கு பெரும் பங்காற்றி வரும் அவர், விளையாட்டு துறைக்கும் கைகொடுத்து வருகிறார்.
இதன்படி, தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்கு லைக்கா அனுசரணை வழங்கி வருவதுடன், 2021ஆம் ஆண்டு முதல் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் லைக்கா நிறுவனம் இருந்துவருகிறது.
லைக்கா நிறுவனம் 2012ஆம் ஆண்டு “உலகளாவிய வணிக நிறுவனமாக” அங்கீகரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு, “Lycatel“ நடுத்தர சந்தையில் நுழைந்தது. 250 தனியார் நிறுவனங்களில் 36 வது இடத்தைப் பிடித்தது.
இங்கிலாந்தில் உள்ள ஆசிய சமூகத்தில் அதன் தாக்கத்திற்காக ஆசிய சாதனையாளர் விருதுகளில் சிறந்த ஒட்டுமொத்த நிறுவனத்திற்கான “தங்க விருது“ வழங்கப்பட்டது.
இவ்வாறாக பல உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ள பிரபல தொழிலதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு இன்று விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை