அரசியல் நோக்கங்களுக்காக மலையகத்தை சீர்குலைக்காதீர்! இராதாகிருஸ்ணன் வலியுறுத்தல்
ஆளும் தரப்புக்கு ஓர் உறுப்பினர் சென்றால் அவருக்கு மூன்று மதுபானசாலைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
அரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை இல்லாதொழிக்க வேண்டாம். பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளை புதிதாக அமைப்பது பாரிய சமூக பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –
சுற்றுலாத்துறை கைத்தொழில் அபிவிருத்தி மிக முக்கியமானது. நாட்டின் பல்வேறு பகுதிகள் சுற்றுலா மையங்களாக அடையாளப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளை சுற்றுலாத்துறை மையங்களாக அடையாளப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.
2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு 23 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தார்கள்.அந்த ஆண்டு மாத்திரம் 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றது.
மொத்த அந்நிய செலவாணியில் 13 முதல் 15 சதவீதமளவிலான வருமானம் சுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழில் ஊடாக கிடைக்கப்பெறுகிறது.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுபடுத்தும் போது பலருக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும். ஆகவே சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
சுற்றுலாத்துறை கைத்தொழிலை விரிவுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு மலையக பகுதிகளில் மதுபான சாலைகளை அமைப்பது முறையற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் டயகம பகுதியில் மதுபான சாலைகளை அமைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.ஆனால் தற்போது நுவரெலியா பகுதியில் மதுபானசாலைகளை அமைக்க நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் தரப்புக்கு ஓர் உறுப்பினர் சென்றால் அவருக்கு மூன்று மதுபானசாலைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
அரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை இல்லாதொழிக்க வேண்டாம், பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளை புதிதாக அமைப்பது பாரிய சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை