கொவிட் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வேன் – அமைச்சர் கெஹலிய சபையில் ஹக்கீமுக்கு பதில்
கொவிட் தொழிநுட்ப குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதன் தீர்மானங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
அதன் பிரகாரம் கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பாகவும் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம்களின் சடலங்கை எரிப்பதற்கு எடுத்த பிழையான நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் மன்னிப்பு கேட்கலாம்தானே.
மஹிந்த ராஜபக்ஷ் பிரதமராக அன்று இருக்கும்போது இந்த விடயங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். சடலங்களை எரிப்பதற்கு விஞ்ஞான ரீதியில் எந்த ஆதாரமும் இருக்கவில்லை.
எந்த நாடும் இந்த நடவடிக்கையை பின்தொடரவில்லை. மக்களின் மத உணர்வுகளுக்கு எதிராகவே இந்த விடயம் இடம்பெற்றிருக்கிறது.
எனவே கொவிட் சடலம் எரிப்பு நடவடிக்கை வெறுப்பு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே சுகாதார அமைச்சர் என்றவகையில் இந்த நடவடிக்கைக்கு ஏன் பகிரங்கமாக மன்னிப்பு கோர முடியாது? என்றார்.
அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், கொவிட் சடலங்கள் எரிக்கப்பட்ட மைக்காக எங்களுக்கு மன்னிப்பு கேட்க முடியும். அதில் பிரச்சினை இல்லை.
ஆனால் இந்த தீர்மானத்துக்கான காரணம் என்ன? யார் பிழை செய்தது என தேடிப்பார்க்க வேண்டி இருக்கிறது. சர்வதேசமாகவும் இருக்கலாம் வேறு யாராகவும் இருக்கலாம்.
என்றாலும் சடலங்கள் எரிக்கப்பட்ட விடயத்தை நானும் மிகவும் உணர்வு பூர்வமான விடயம். அதனால் இது தொடர்பாக ஆராய்ந்து, இது தொடர்பாக மேலுமொரு குழு அமைப்பதற்கு முடியுமான சாத்தியக்கூறு தொடர்பாகவும் கவனம் செலுத்தி, இதன் சட்டத்தன்மை தொடர்பாகவும் தேடிப்பார்ப்பேன்.
அதேநேரம் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடி கொவிட் குழு மற்றும் அதன் செயற்பாடுகளின் தீர்மானங்கள் தொடர்பாக ஆராய்ந்து அதன் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
கருத்துக்களேதுமில்லை