ஆசிரியர் தொழிலை விட்டுசென்றவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : கல்வி அமைச்சர் சுசில்!
ஆசிரியர் தொழிலை விட்டுசென்றவர்களுக்கு பதிலாக பட்டதாரிகளையும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் நியமிப்பதற்கான அதிகாரத்தை விரைவில் மாகாண சபைகளுக்கு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டிலுள்ள ஆரம்பநிலை கல்வி முற்றிலும் வீழ்ச்சியடைவதற்கு காரணம் கொவிட் மட்டுமல்ல பயிற்சியற்ற ஆசிரியர்களை ஆரம்ப பிரிவிற்கு உட்படுத்தியமையே பிரதான காரணம்.
இவ்வாறு பயிற்சியற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி பரீட்சை நடத்தி உரிய பிரிவுகளுக்கு நியமிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை ஒரு பிரிவினர் நீதிமன்றத்திற்கு சென்று தடை செய்தார்கள்.
இது நில வழக்கு அல்ல. பாடசாலை மாணவர்களின் விடயத்தில் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும். இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு இது நில வழக்கு அல்ல.
இடைக்கால தடை உத்தரவுக்கான விளக்கத்தை நீதி அமைச்சரிடம் கேட்க விரும்புகின்றேன். இடைக்கால தடை உத்தரவு நிரந்தர உத்தரவாக இருக்க முடியாது.
இடைக்கால உத்தரவுகளுக்கு கால அவகாசம் இருக்க வேண்டும். அதற்கு சிவில் நடைமுறை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
சட்டத்துறை அமைச்சரிடம் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஆறு மாதங்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் நீதி கோரி நீதிமன்றத்திற்கு செல்கின்றார்கள் ஆனால் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து யாரும் கேள்வி கேட்பதில்லை.
அதிபர்களை நியமிக்க முடியாது. இதுபோன்ற விஷயங்களால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
இவற்றை பதிவிடும் மனுதாரர்களுக்கு இது புரியவில்லையா. எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பணியமர்த்த மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
ஆசிரியர் தொழிலை விட்டுசென்றவர்களுக்கு பதிலாக பட்டதாரிகளையும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் நியமிப்பதற்கான அதிகாரத்தை எதிர்வரும் 2 வாரங்களில் மாகாண சபைகளுக்கு வழங்குவேன்.
அதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்க தீர்மானித்துள்ளேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை