சரத்வீரசேரவின் கருத்தைக் கண்டித்து முல்லை சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு! நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்குமாறும் வலியுறுத்து
விஜயரத்தினம் சரவணன்
கடந்த 22 ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பிலும், நீதித் துறையை அச்சுறுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் உரை நிகழ்த்தியமையைக் கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது நீதித்துறை சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படுவதுடன், நீதித்துறையிலே கடமையற்றுகின்ற சட்டத்தரணிகள், நீதிபதிகள் சுதந்திரமாகச் செயற்பட இடமளிக்கப்படவேண்டுமெனவும் சட்டத்தரணிகளால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –
கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பிலும், நீதித் துறையை அச்சுறுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் உரை நிகழ்த்தியிருந்தார்.
இந் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவின் இத்தகை உரையைக் கண்டித்து அடையாள பணிப் பகிஷ்கரிப்பொன்றை மேற்கொள்வதென கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.
அத்தோடு குறித்த அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஏனைய சட்டத்தரணிகள் சங்கங்களுக்கும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பும் விடுத்திருந்தது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு நீதிமன்றின் முன்பாக அடையாள பணிப் பகிஷ்கரிப்பொன்றை மேற்கொண்டனர்.
அத்தோடு இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள், நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்குத் தடையேற்படுத்தாதே, தலையிடாதே தலையிடாதே நீதித்துறையின் சுதந்திரத்தில், சுயாதீன நீதித்துறையின் செயற்பாட்டை உறுதிசெய்யுங்கள், நாடாளுமன்றச் சிறப்புரிமையைத் துஷ்பிரையோகம் செய்யாதே, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தாதே, நீதித்துறை சுதந்திரம் ஓங்குக, கௌரவ நீதிபதிகளை அவமதிக்காதே, கௌரவ நீதிபதிகளின் கட்டளைக்கு மதிப்பளி, கௌரவ நீதிபதிகளின் கடமையில் தலையிடாதே உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாதைகளைத் தாங்கியவாறு அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தொடர்ந்து நீதித் துறையை அவமதிக்கும் வகையிலும், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும்வகையிலும் செயற்படுகின்றமை கண்டனத்திற்குரியதென பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகளால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் உள்ளது ஒரேயொரு நீதித்துறை எனவும், அதில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பாகுபாடுகளின்றி நீதிச்சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே இங்கு கடமையில் ஈடுபட்டிருக்கின்றனர் எனவும், அந்த நீதிபதிகளின் சுதந்திரத்தையும், அவர்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை எனவும் சட்டத்தரணிகள் இதன்போது வலியுறுத்தினர்.
சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் கடைப்பிடிக்கவேண்டிய, சட்டத்தை உருவாக்கும் நாடாளுமன்றில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில், நீதிபதியின் தனிப்பட்ட சுயாதீனத் தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை தவிர்கப்படவேண்டும் எனவும், சரத் வீரசேகரவின் கருத்து நீதித்துறைக்கு ஏற்பட்ட பாரிய அவமானம் எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு சிறப்புரிமையைத் துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் நாடாளுமன்றாலும், சபாநாயகராலும் கண்டிக்கப்பட்டிருக்கவேண்டும் எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அதேவேளை நீதித்துறையிலிருக்கின்ற குருந்தூர்மலை தொடர்பான வழக்கு கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு காலத்துக்குக் காலம், கட்டளைகள் நடைமுறைப்பட்டுவந்துள்ளதை சட்டத்தரணிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
ஒரு நீதிமன்றின் கட்டளையிலே திருப்தி அடையாத தரப்பு, அந்த நீதிமன்றக் கட்டளையிலோ, நீதிமன்றின் தீர்ப்பிலோ அதிருப்தியிருந்தால் அதை மேன்முறையீடு செய்யமுடியும் அல்லது, மீளாய்வு விண்ணப்பத்தின்மூலம் அந்தத் தீர்ப்பைக் கேள்விக்குள்ளாக்கமுடியும் என்பதையும் இதன்போது சட்டத்தரணிகள் தெளிவுபடுத்தியதுடன், தனிப்பட்ட நபர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நீதிமன்றக் கட்டளையைக் கேள்விக்குட்படுத்த முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு இந்த குருந்தூர்மலை வழக்கில் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பில் மேன்முறையீட்டு விண்ணப்பங்களோ, மீளாய்வு விண்ணப்பங்களோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
சரத்வீரசேகர தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவே இவ்வாறான இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார் என்றே தாம் கருதுவதாகவும் சட்டத்தரணிகளால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
நீதித்துறை சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படுவதுடன், நீதித்துறையிலே கடமையாற்றுகின்ற சட்டத்தரணிகள், நீதிபதிகள் சுதந்திரமாகச் செயற்பட இடமளிக்கப்படவேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்த விடயம் தொடர்பிலே ஜனாதிபதி, நீதிஅமைச்சர், நீதிச்சேவை ஆணைக்குழு என்பவற்றுக்கு சட்டத்தரணிகள் தமது தீர்மானங்களை அனுப்ப முடிவெடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நீதி அமைச்சு, சட்டத்துறை தலைமையதிபதி, நீதிசேவை ஆணைக்குழு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் என்பன இந்த விடயத்திலே தலையிட்டு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இல்லையெனில் இந்த நாட்டில் நீதித்துறை இயங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை எனவும் சட்டத்தரணிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
கருத்துக்களேதுமில்லை