இந்து – பௌத்த மக்களுக்கு இடையில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சி நிரல்! பிரசன்ன ரணதுங்க சாடல்
இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு இடையில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இத்தகைய மோதலை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் ஆதரவை தடுத்து நிறுத்த முடியும் என எதிர்க்கட்சிகள் நினைத்து வருகின்றன எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
எனவே, இந்த விடயத்தை மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கம்பஹா லக்சியனே மதுரவில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு –
கேள்வி: இதுவரை, நாட்டின் அபிவிருத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய நிலை என்ன?
பதில்: கொரோனா தொற்று காரணமாக நாடு ஓரளவு பின்னடைவை சந்தித்துள்ளது. நாட்டுக்கு முதலீடுகள் வரவில்லை. அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு. முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகிறார்கள். அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள், அதாவது பட்ஜெட்டுக்குப் பிறகு, நாடு இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
கேள்வி: அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு. தேர்தல் நடத்தப்படுமா? அந்த அபிவிருத்திப் பணியை உங்களால் செய்ய முடியுமா?
பதில்: தேர்தல் என்பது வேறு விஷயம். கடந்த காலங்களில் விடுபட்ட பணிகளை புதுப்பிக்கும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு அனைத்து எம்.பி.க்களும் கட்சி வேறுபாடின்றி அழைக்கப்பட்டுள்ளனர். அந்த வேலையைப் பற்றி பேசுங்கள். முதலில் கிராமத்தில் உள்ள மக்களின் தேவைகளைக் கண்டறிய வேண்டும். அவை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட வேண்டும். மற்றபடி கொழும்பின் அறைகளுக்குள் இருந்து கொண்டு செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்கள் கிராமத்துக்கு பிரயோசனம் இல்லை. எனவே, ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
கேள்வி: மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன எனக் கூறப்படுகிறது.
பதில் ; இல்லை, அரசாங்கம் மற்றும் மாகாண சபைகள் அனைத்தும் ஒரே முறையைப் பின்பற்ற வேண்டும், கிராமியக் குழுவின் கருத்துக்களுக்கு ஏற்ப மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதனால் யாருக்கும் பிரச்சினை இல்லை.
கேள்வி: மாகாண சபைகள் அதிகபட்ச அதிகாரங்களைக் கேட்கின்றன. அப்படி செய்தால் பின்னர் பிரச்சினைகள் ஏற்படும் தானே?
பதில்: மாகாணத்தின் தேவைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அந்த மாகாண சபைகளை மக்கள் நிராகரிப்பார்கள். எனவே, இந்த நிறுவனங்கள் அரசின் கொள்கை கட்டமைப்பிற்குள் செயற்பட வேண்டும். அதன் பிறகு எந்த பிரச்சினையும் இருக்காது.
கேள்வி: மாகாண சபை ஒரு வெள்ளை யானை. ஆனால் அது நிராகரிக்கப்படாது.
பதில்: எந்த வேலையும் செய்யாவிட்டால் மாகாண சபை வெள்ளை யானை. நாம் அதை வேலை செய்யும் நிலைக்கு கொண்டு வர வேண்டும். நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட்டால் அந்த மாகாண மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நான் மாகாண சபையில் இருந்த போதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன எனக் கூறினேன். அவநம்பிக்கையுடன் வேலைக்குச் சென்றால் பிரச்சினைகள் வரும். எனவே, அந்த இரண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற அமைச்சுகளின் நிர்வாக அதிகாரங்களை பிரிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளோம். அதை எப்படி செய்வது என்று கலந்தாலோசிக்க ஒரு திட்டம் தேவை.
கேள்வி: மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு மோதலுக்கு வழிவகுக்கும், இல்லையா? திருகோணமலையிலும் சில பிரச்சினைகள் இருப்பதை பார்த்தோம்.
பதில்: சிலர் இந்த நாட்டில் அவ்வப்போது நெருக்கடிகளை உருவாக்குகிறார்கள். தற்போது மதங்களுக்கு இடையே பிரச்சினைகள் தொடங்கியுள்ளன. ஈஸ்டர் தாக்குதல் என்பது கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து சில முஸ்லிம் குழுக்கள் நடத்திய தாக்குதல். இப்போது இந்து-பௌத்த மோதலை உருவாக்க முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்தியாவிடம் இருந்து எங்களின் ஆதரவை நிறுத்தும் வகையில் செயல்படுகிறது. பிரதமர் மோடி ஓர் இந்து. அதனால்தான் சிலர் மத மோதலை உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்தப் பிரச்சினையை நாம் மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டும்.
கேள்வி: அனைவரும் தேர்தல் கேட்கிறார்கள். தேர்தலை தள்ளி வைப்பது ஏன்?
பதில்: நாம் அரசமைப்பின் படி செயற்பட்டுள்ளோம். உரிய காலத்தில் தேர்தலை எதிர்கொள்வோம்.
கேள்வி: சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் விவாதிக்கப்படவுள்ளது. அதை எதிர்கொள்ள அரசு தயாரா?
பதில்: நாம் அடுத்த மாதம் 6, 7, 8 ஆகிய மூன்று நாள்களை நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு ஒதுக்கியுள்ளோம். நாங்கள் அதற்கு முகம் கொடுக்கவுள்ளோம். சுகாதார அமைச்சில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. இது 100 சதவீதம் சரி என்று நாங்கள் கூறவில்லை. ஆரோக்கியம் என்பது மக்களுக்கு மிகவும் முக்கியமான விஷயம். நாட்டில் மருத்துகள் இல்லை என்று தொழிற்சங்கங்கள் சில அரசுக்கு எதிரான சித்தாந்தத்தை உருவாக்கின. இதற்கு யார் காரணம் என்பதை விவாதத்தில் பார்க்கலாம்.
கேள்வி: இதை வெற்றி கொள்ள முடியுமா?
பதில்: ஆம்… வெற்றி பெறுவோம்.
கேள்வி: அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு டலஸ்-அநுர சமாதானப் பேச்சு நடந்து வருகிறது. உங்களுக்கெல்லாம் என்ன நடக்கும்?
பதில்: ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுன ஒரு பலமான கட்சி. தம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியும். கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்ய-உக்ரைன் போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் போராட்டத்தை உருவாக்கி மொட்டுக்கு அடித்தனர். எங்கள் உறுப்பினர்கள் அடித்து தரையில் இழுத்துச் செல்லப்பட்டனர். 80 எம். பி. களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இவை ஓர் அமைப்பினரால் நடத்தப்பட்ட விஷயங்கள். நாங்கள் கட்சியாக ஓர் அமைப்பை உருவாக்கும் போது மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்த சிலர் முயற்சித்தார்கள். அதனையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கேள்வி: யார் சேர்ந்தாலும் மொட்டு வெல்லும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?
பதில்: ஜனாதிபதி தேர்தலில் மொட்டை ஆதரிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவார். பொதுத் தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைக்க பேச்சு நடைபெறுகிறது. அது வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலில் வெற்றி பெறலாம்.
கேள்வி: ஈ.ரி.எவ்., ஈ.பி.எவ். பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
பதில்: அது ஒரு பிரச்சினையல்ல. அந்த உறுப்பினர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றியுள்ளது. அப்படிச் செய்யாவிட்டால், வங்கி அமைப்பு சீர்குலைந்துவிடும். கோட்டாபய ராஜபக்ஷ, நிர்வாகத்தில் அனுபவம் இல்லாததால் அவர் வலையில் சிக்கினார். இப்போது ஓர் அனுபவமிக்க தலைவர் இருக்கிறார்.
கேள்வி: கம்பஹா மாவட்டத்தில் வன்முறைக் குழுக்கள் ஒன்று செயற்படுகின்றது.
பதில்: கோட்டாபய ராஜபக்ஷ பாதாள உலகத்துக்கும் போதைப்பொருளுக்கும் எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததன் காரணமாகவே பதவி விலகச் செல்ல நேர்ந்தது. அந்த கடத்தல்காரர்கள் தான் மூன்று மாதங்களாக போராட்டத்துக்கு பிரியாணி சாப்பிடக் கொடுத்தார்கள். இந்த கடத்தல்காரர்கள் கப்பம் வாங்குகிறார்கள். சாமானிய மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க, இதை கட்டுப்படுத்த வேண்டும்.
கேள்வி: அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியுமா?
பதில்: நாங்கள் அடக்குகிறோம், எதிர்க்கட்சி பாதாள உலகத்துக்காக நிற்கிறது.
கருத்துக்களேதுமில்லை