மக்கள் பொறுமை இழக்கும் முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள்! முஜிபூர் ரஹ்மான் கோரிக்கை
மக்கள் பொறுமை இழக்கும் முன்னர் ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ‘சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
இந்த நிலையில் சுகாதார அமைச்சரைக் காப்பாற்றும் வகையில் செயற்படுமாறு ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் இந்த குற்றவாளி அமைச்சர்களைப் பாதுகாக்கும் பொருட்டே தற்போது செயற்பட்டு வருகிறார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்து விட்டன என தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹரின் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவும் பல விடயங்களை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியிருந்தார்கள். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உண்மைகளைக் கண்டறிந்துகொள்ளத் தான் அரசாங்கத்துடன் இணைவதாகவும் அவர்கள் அன்று கூறினார்கள்.
எனவே, இவர்கள் அன்று வெளிப்படுத்திய அந்தக் கருத்துக்கள் உண்மையானவையா இல்லையா என்பதைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரியப்படுத்த வேண்டும்.இவர்களின் இந்தக் கருத்துக்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா?
அதேபோன்று ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்தரதாரியைக் கண்டுபிடித்துவிட்டார்களா என்று அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோவிடமும் மனுஷ நாணயக்காரவிடமும் நாம் கேட்க விரும்புகிறோம். உங்கள் அரசாங்கம் இதுதொடர்பாக விசாரணைகளை முடித்துவிட்டதா?
மக்கள் இவற்றையெல்லாம் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொறுமை இல்லாது போகும் முன்னர் தேர்தல் ஒன்றை நடத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை