ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு அனுரகுமார ஒருபோதும் சவாலாகப்போவதில்லை – ஆஷு மாரசிங்க
ஜனாதிபதி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திஸாநாயக்கவை பெயரிட்டிருக்கிறது. இது பொது வேட்பாளராக களமிறங்க இருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த வகையிலும் சவாலாக அமையப்போவதில்லை.
நாட்டை கட்டியெழுப்ப இருக்கும் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
டலஸ் அணி இது தொடர்பாக ஜே.வி.பி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளன.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் கலந்துரையாடுவார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் நாட்டை முன்னுக்கு கொண்டுசென்று, அபிவிருத்தி செய்ய எந்த திட்டமும் இல்லை. அதற்கான வேலைத்திட்டத்தையும் இவர்கள் இதுவரை முன்வைக்கவும் இல்லை.
என்றாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியிலேயே அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்வதற்கான இலக்கொன்று அவரிடம் இருக்கிறது.
அந்த இலக்கை நோக்கிய பயணத்தையே தற்போது அவர் மேற்கொண்டு வருகிறார். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த சந்தர்ப்பத்தில் அன்று ஜேஆர் ஜயவர்த்தன நாட்டை அபிவிருத்தி செய்ய மேற்கொண்ட நடவடிக்கையையே தற்போது ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருகிறார்.
அதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றபோதும் ரணில் விக்ரமசிங்க 2048ஆகும்போது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் வேலைத்திட்டத்தை படிப்படியாக மேற்கொண்டு வருகிறார்.
அதற்காகவே அவர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டு அந்த நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு வருகிறார்.
அத்துடன் உத்தியோக பூர்வமாக ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவது அடுத்த வருடம் நவம்பர் மாதமளவிலாகும்.
அப்படி இருக்கும்போது எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்காக ஏன் அவசரப்படவேண்டும் என கேட்கிறோம்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கான நடவடிக்கையாகவே எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளன.
அதனால்தான் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவை பெயரிட்டிருக்கிறது. அது தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.
ஏனெனில் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை, அதில் இருந்து மீட்டு, நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தது ரணில் விக்ரமசிங்க என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
புதிய தலைவர் ஒருவரை நாட்டுக்கு கொண்டுவந்து, நாட்டுக்கு ஏற்பட்ட நிலை மக்களுக்கு தெரியும். அந்த தவறை மக்கள் மீண்டும் செய்ய மாட்டார்கள்.
அதனால் அரசியல் அனுபவம். திறமை சர்வதேச நாடுகளுடன் சிறந்த தொடர்புகளை மேற்கொள்ள முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும்.
ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
அதனால் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டிருப்பது தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.
நாட்டை கட்டியெழுப்ப முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும். அவரால் நாட்டை கட்டியெழுப்ப முடியாமல்போனால் நாடு இல்லாமல்போகும்.
எனவே ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க இருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் சவாலாகப்போவதில்லை என்றார்.
கருத்துக்களேதுமில்லை