கண்டி இராசதானிக் காலத்துக்கு உரிய 6 புராதனப் பொருள்கள் மீளக்கையளிப்பு! குனே உஸ்லு தகவல்
இலங்கையின் கண்டி இராசதானிக்காலத்துக்கு உரியவை என்று கண்டறியப்பட்டுள்ள 6 புராதனப்பொருள்களை இலங்கையிடம் மீளக்கையளிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானம் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் புரிந்துணர்வைக் காண்பிப்பதாக அந்நாட்டின் கலாசார மற்றும் ஊடக இராஜாங்க செயலாளர் குனே உஸ்லு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் நெதர்லாந்தின் ரிஜ்க்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள புராதனப்பொருள்களில் 6 பொருள்கள் இலங்கைக்குச் சொந்தமானவை எனக் கண்டறியப்பட்டது.
அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தங்கத்தினாலான உறையுடனான உடைவாள், வெள்ளியிலான உறையுடனான உடைவாள், தங்கத்தினாலான கத்தி, இரண்டு பெரிய துப்பாக்கிகள் மற்றும் லெவ்கே திஸாவுக்கு சொந்தமானது என்று நம்பப்படும் துப்பாக்கி ஆகிய 6 புராதனப்பொருள்களும் கண்டி இராசதானிக்காலத்துக்கு உரியவை என்று கண்டறியப்பட்டிருப்பதுடன் அவை 1765 இல் ஒல்லாந்தர்களால் கண்டி அரச மாளிகை கைப்பற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்திய வர்த்தக கம்பனியால் கொண்டுசெல்லப்பட்டவை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இதனடிப்படையில் இப்புராதனப்பொருள்களை மீண்டும் இலங்கையிடம் ஒப்படைக்குமாறு புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால் நெதர்லாந்தின் கல்வி, கலாசார மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சுக்கு இராஜதந்திர ரீதியிலான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.
அவ்வேளையில் காலனித்துவ நாடுகளுக்குச் சொந்தமான புராதனப்பொருள்களை மீண்டும் ஒப்படைக்கவேண்டும் என்ற கொள்கை ரீதியிலான தீர்மானம் நெதர்லாந்து அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் விதமாக சுயாதீன குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் கோரிக்கை அக்குழுவால் பரிசீலிக்கப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 6 பொருள்களையும் இலங்கையிடம் உத்தயோகபூர்வமாகக் கையளிக்கவேண்டும் என்ற சிபாரிஸூம் முன்வைக்கப்பட்டது. அதற்கமைய புராதனப்பொருள்களை இலங்கையிடம் மீளக்கையளிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கடந்த ஜுலை மாதம் 6 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் பொருள்களுக்கான சட்டரீதியான உரித்தை இலங்கைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான ஆவணத்தில் நெதர்லாந்தின் கலாசார மற்றும் ஊடக இராஜாங்க செயலாளர் குனே உஸ்லு கடந்த வாரம் கைச்சாத்திட்டார். அதன்படி அப்பொருள்களை இலங்கைக்கு எடுத்துவருவதற்கான திகதி வெகுவிரைவில் தீர்மானிக்கப்படும். அவ்வாறு கொண்டுவரப்படும் பொருள்களை வைத்து விசேட கண்காட்சியொன்றை நடத்துவதற்கான முயற்சிகள் இலங்கை தேசிய அருங்காட்சியகத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதுகுறித்துக் கடந்த வாரம் கருத்து வெளியிட்ட நெதர்லாந்தின் கலாசார மற்றும் ஊடக இராஜாங்க செயலாளர் குனே உஸ்லு, இலங்கைக்குச் சொந்தமான புராதனப்பொருள்களை இலங்கையிடம் மீளக்கையளிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானம் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் புரிந்துணர்வைக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டதுடன், காலனித்துவ நாடுகளின் வசமுள்ள புராதன சின்னங்களை உரிய நாடுகளிடம் கையளிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இது அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை