தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறைவு செய்க! அமைச்சர் பிரசன்ன பணிப்பு
கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கொழும்புகே மாவத்தை மற்றும் டொரிங்டன் மாவத்தை வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை விரைவாக முடிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இரண்டு வீடமைப்புத் திட்டங்களின் கீழ் 735 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு வீட்டுத்திட்டங்களும் நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன.
இதற்காக செலவிடப்படும் தொகையை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேச்சு நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் நிதி அமைச்சுடன் இது பற்றிக் கலந்துரையாடியுள்ளார்.
நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 25 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, 23 வீட்டுத்திட்டங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது.
பூர்த்தி செய்யப்பட்ட 23 வீட்டுத் திட்டங்களின் கீழ் 14,049 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தெமட்டகொட-மிஹிந்துசென்புர, ஒருகொடவத்த-புரதொர செவன, பொரளை- சிரிசர தோட்டம், பொரளை-மெத்சர தோட்டம், புளூமெண்டல்-சிரிசந்த செவன, வெள்ளவத்தை-லக்முத்து செவன, ஹேனமுல்ல-ரந்திய தோட்டம், எதிரிசிங்கவத்த-சிறிமுத்து தோட்டம், பெர்கியூஸன் வீதி- மூவதுர தோட்டம், மாளிகாவத்தை – லக்ஹிரு செவன, சாலமுல்ல- லக்சந்த செவன கட்டம் 1 மற்றும் கட்டம் 2, பிரதீபா மாவத்தை- சியசெத செவன, புளூமெண்டல்- ஜயமங்க செவன, மாளிகாவத்தை – லக்சென செவன, ஹேனமுல்ல- மெத்சந்த செவன, தெமட்டகொட- சியபத் செவன, ஹேனமுல்ல- சத்ஹிரு செவன, கொலொன்னாவ- சங்கிந்த செவன, ஹேனமுல்ல- மிஹிஜய செவன, ஹேனமுல்ல- ஹெலமுத்து செவன, ஹேனமுல்ல- ரன்மித்து செவன, பொல்கேன்கொட – கொலொம்தொட்ட சரசவி உயன ஆகியன கட்டி முடிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களாகும்
நகர மறுமலர்ச்சித் திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயற்படுத்தப்படுகிறது. கொழும்பில் உள்ள சேரிகளில் வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மாற்று வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் நிலத்தை அபிவிருத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
2010ஆம் ஆண்டு கொழும்பு நகரை திட்டமிட்ட வகையில் அபிவிருத்தி செய்யும் முக்கிய நோக்கத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அரசாங்க கொள்கையாக நகர மறுமலர்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சுயநிதி மாதிரியுடன் கூடிய திட்டமாக இதை செயற்படுத்துவதே நோக்கமாக இருந்தது.
இதன்படி, திறைசேரியில் இருந்து 10 பில்லியன் ரூபா கடன் பத்திரப்பதிவு மூலம் ஆரம்ப செலவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. திட்டத்துக்காக விடுவிக்கப்பட்ட நிலத்தை மீண்டும் வீடுகள் கட்டவும், கலப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தவும், நகரை பாதுகாத்து அழகுபடுத்தவும், நகர வளர்ச்சித் திட்டத்துக்கு தேவையான நிதியை உருவாக்க திட்டமிடப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபை 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியதோடு, அந்தத் திட்டத்துக்கேற்ற 1,500 தோட்ட குடியிருப்புகளில் 68,000 வீட்டு அலகுகளை அடையாளம் கண்டுள்ளது.
இதன் மூலம் தோட்டங்களை புனரமைப்பதன் மூலம் அடையாளம் காணப்படும் சுமார் 900 ஏக்கர் நிலத்தில் 300 ஏக்கர் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்காகவும், 150 ஏக்கர் பொது பொழுதுபோக்குக்காகவும் ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 450 ஏக்கர் நிலம் கலப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
வீடுகள் கட்டுவதற்கான நிதியை உருவாக்குவதற்கான அடிப்படைத் திட்டங்களும் தயாரிக்கப்படவுள்ளன எனக் கூறப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை