மன்னாரில் ஹோட்டல் குளியலறை உபகரணங்களை திருடிய இருவர் கைது : 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியலறை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியலறை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 58 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் குளியலறை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

அதனையடுத்து, மன்னார் பொலிஸாரின் துரித நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியலறை உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின் சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இவ்வாறான பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.