சபிரி அடுக்குமாடி குடியிருப்புத்திட்ட பணிகளை பூர்த்தி செய்யுமாறு பிரசன்ன ரணதுங்க பணிப்பு

தங்காலை, மொரட்டுவ மற்றும் ரன்பொகுனுகம பிரதேசங்களை மையமாகக் கொண்ட சபிரி அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தின் பணிகளை இந்த வருடத்துக்குள் பூர்த்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்த மூன்று வீட்டுத் திட்டங்களும் 132 வீட்டு அலகுகளைக் கொண்டிருக்கின்றன. அவை 30 வீடுகளைக் கொண்ட தங்காலை சபிரி அடுக்குமாடித் திட்டம், 72 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட ரன்பொகுனுகம வீடமைப்புத் திட்டம் மற்றும் 30 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட மொரட்டுவ வீடமைப்புத் திட்டமாகும்.

இந்த மூன்று வீட்டுத் திட்டங்களின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. எஞ்சிய பணிகளை இவ்வருடத்திற்குள் பூர்த்தி செய்து விரைவில் மக்களிடம் கையளிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் 2022ஆம் ஆண்டு நிறைவடைய வேண்டும். எனினும், கொரோனா தொற்று, போராட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த காலத்தில் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகிறது. எனவே வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்க முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டுத் திட்டப் பணிகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை பெற அரசின் தலையீடு தேவைப்பட்டால் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.