நீதிமன்றங்களை அவமதிப்பவர்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதியரசர் திலீப் எச்சரிக்கை
!
நீதிமன்றத்தின் சட்டவாட்சியையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் கேள்விக்குட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளமையை தாம் அவதானித்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது, அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –
நீதிமன்றங்களும், சட்டத்துறைகளும் சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் சட்டவாட்சியையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் சவாலுக்கு உட்படுத்தும் நிலையை அவதானிக்க முடிகிறது. எனவே இது தொடர்பில் நீதிபதிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல் உங்கள் முன்னாள் நடக்குமென்றால், நீதிபதிகளே அந்த வழக்கை எடுத்து விசாரித்து, அவமதிப்பைச் செய்தவருக்கு தண்டனை வழங்க முடியுமென்று லோட் டெனிங் எழுதிய ‘சட்டத்தின் ஒழுக்கம்’ எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.
நீதிமன்ற அவமதிப்பு என்பது நீதிபதிகளை அவமதிக்கவில்லை. அது நீதிமன்ற ஆட்சியையும், அதிகாரத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு என்பதை நீதிபதிகள் தனிப்பட்ட விடயமாக எடுக்கத் தேவையில்லை. – என்றார்.
இதன் போது ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் எழுதிய நூலின் அறிமுகமும் இடம்பெற்றது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ. றெளசுல் ஹாதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், தொழில் நியாய சபை நீதிபதிகள், சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள், இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை