அமைச்சு பதவியில்லாமல் அரச இல்லத்தில் வசிக்கின்றமை வெட்கமடையும் செயற்பாடு! மனுஷ நாணயக்கார சாட்டை

அமைச்சு பதவி ஏதும் வகிக்காத நிலையில் அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ்வது ஒட்டுமொத்த மக்களின் சிறப்புரிமையையும் மீறும் செயற்பாடாகும்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுசரனையுடன் தொடர்ந்து அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ்வது வெட்கமடைய வேண்டியதொரு செயற்பாடு என வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து மே 09 சம்பவத்தால் எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

அப்போது நான் சுகாதார  அமைச்சராக பதவி வகித்தேன். கொழும்பு 07 உள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்தேன். பதவி விலகியதன் பின்னர் எனக்கு நீதி கிடைக்கும் வரை அந்த வீட்டில்  வசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு உரிய தரப்பினரிடம் வலியுறுத்தினேன்.

அமைச்சு பதவியில் இருந்து விலகியதன் பின்னர் தொடர்ந்து அரச உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசிப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

அதற்கமையவாகவே நான் அந்த இல்லத்தில் வசிக்கிறேன்.இவ்விடயம் தொடர்பில்  பல்வேறு தரப்பினர் பொய்யான கருத்துக்களை தெரிவித்துள்ளதால் எனது கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற  சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. – என்றார்.

இதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணக்கார, அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி வகிக்கும் போது மாத்திரமே அரச உத்தியோகப்பூர்வ இல்லத்தில்  வசிக்க முடியும். பதவி விலகியதன் பின்னர் தொடர்ந்து அரச உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசிக்க முடியாது. அமைச்சு பதவி வகிக்காத நிலையில் அரச இல்லத்தில் வசிப்பது ஒட்டுமொத்த மக்களின் சிறப்புரிமையை மீறும் ஒரு செயற்படாகும். இது வெட்கப்பட வேண்டியதொரு செயற்பாடாகும். – என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன, தவறான விடயங்களை குறிப்பிட வேண்டாம். மே 09 ஆம் திகதி ஆளும் தரப்பினரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட போது எனது வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது நான் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டதால் எனக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை இழுத்தடிக்கப்பட்டது. இதற்கு எதிராகவே நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடினேன் . – என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணயக்கார பைத்தியம் கலக்கமடைந்தால் வைத்தியர்கள் கலக்கமடைவதில்லை என்று குறிப்பிடுவார்கள். இவரை வைத்தியர் என்கிறார்கள்.ஆனால் இவர் ஒரு பைத்தியம்,அதனால் தான்  தொப்பியை எடுத்து போட்டுக் கொள்கிறார். – என்றார்.

இதன்போது மீண்டும் உரையாற்றிய சன்ன ஜயசுமன, மனித குலம் மூளையை முறையாக பாவித்து செயற்பட வேண்டும்.அறிவை பயன்படுத்த முடியாதவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றமை எமது தவறு அல்ல. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.