கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் – தவறினால் மக்கள் போராட்டத்தில் குதிப்பர் – ரவிகரன்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முழுமையாக அகழ்ந்து, ஆய்வுசெய்யப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு உண்மைகள் வெளிக்கொணரத் தவறினால் மக்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஒன்பதுநாட்கள் இடம்பெற்ற நிலையில், செப்ரெம்பர் (15) நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஒக்ரோபர் மாத மூன்றாவது வாரத்தில் அகழ்வாய்வுகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த ஒன்பது முன்னெடுக்கப்பட்டுவந்தநிலையில், 17மனித எலும்புக்கூட்டத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், இன்னும் பல மனித எலும்புக்கூடுகள் அங்கே இருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

இந் நிலையில் ஒன்பதுநாட்கள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றதையடுத்து, குறித்த அகழ்வாய்வுப் பணிகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதப்புதைகுழியை ஆய்வுசெய்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேறு பணிக்காக செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இந்த மனிதப் புதைகுழி முற்று முழுதாக அகழ்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன், இந்த மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைத் தன்மை வெளிவரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடகவிருக்கின்றது.

அத்தோடு சர்வதேச நாடுகள் இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விடயத்தில் தலையிட்டு, இந்த மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கை அரசின் பொறுப்புக் கூறலுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும்.

குறிப்பாக தற்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது உறவுகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந் நிலையில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்றபோது இராணுவத்திடம் சரணடைந்து, தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களாகத் தேடப்படுபவர்கள், குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்இங்குள்ள பலருக்கும் சந்தேகங்கள் இருக்கின்றன.

இப்படியான சூழலில் இங்கு அகழ்வாய்வு மேற்கொள்பவர்களை நாம் நம்புகின்றோம்.

இந்த அகழ்வாய்வுகளில் உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும்.

அவ்வாறு உண்மைகள் வெளிக்கொணரத் தவறும் பட்சத்தில் மக்கள் திரண்டு போராட்டங்களை நடாத்தவேண்டிய சூழல் ஏற்படும் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.