தியாகி திலீபனை இந்திய அஹிம்சையும் இலங்கை பௌத்தமும் கொலைசெய்தன! அருட்தந்தை மா.சக்திவேல் உணர்ச்சிப் பேச்சு

 

தியாகி திலீபன் சாகவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் அஹிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளன. எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தி தண்டிக்கப்படும் வரையும் இந்த தேசம் எங்கள் இலச்சியம். அரசியல் வெல்லும் வரை சாட்சியாக நாங்கள் போராடுவோம் எமது போராட்டம் தொடரும் என மனித உரிமை செயற்பாட்டாளரான வணபிதா மா. சக்திவேல் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவில் இருந்து யாழ் நோக்கிய தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி வெள்ளிக்கிழமை மாலை பொத்துவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வணபிதா சக்திவேல் இவ்வாறு தெரிவித்தார்.

தியாகி திலீபனுடைய 36 ஆவது நினைவு நாளில் சுடர் ஏற்றுகின்றோம். இந்த சுடர் தாயகத்தின் அரசியல் இலட்சியத்தின் சுடர் அன்று. திலீபன் என்ன கோரிக்கைகளை முன்வைத்தாரோ அந்தக் கேரிக்கைகளை இன்றும் நாம் அதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த போராட்டம் வெற்றி பெறும்வரையில் பயணத்தை தொடருவோம் அவரின் பாதத்தில் சத்தியம் செய்கின்றோம்.

எங்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாளர்கள் தொடர்ந்து எங்களை ஏமாற்றுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர். தியாகி திலீபன் சாகவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் அஹிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரைக் கொலை செய்துள்ளன. சிங்கள பௌத்தம் கொலை செய்யும் அழிக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் தியாகி திலீபன் இருக்கின்றார்.

இந்த நாடு அழிவுகளுக்கு மத்தியிலே தான் இவர்கள் மகிழ்சியைக் காண்கின்றனர். தங்களுடைய இனத்தையே அழிப்பவர்கள் 2019 உயித்த ஞாயிறு குண்டுவெடிப்பு, தெற்கிலே பாரிய வெடிப்பாக வெளிப்பட்டுள்ளது. இந்த வெடிப்பிற்கு காரணமாணவர்கள் மஹிந்த, கோட்டாபய மட்டுமல்ல இந்தியாவும் பதில் சொல்லவேண்டும்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் கொல்லப்படும்போது இந்தியாவும் சர்வதேசமும் பாத்துக்கொண்டது. அவ்வாறு பார்த்துக் கொண்டதன் காரணமாகத்தான் 2019 ஆம் ஆண்டு இந்தக் குண்டுவெடிப்பு நடந்தது. அவர்களுடைய அரசியலுக்காக – அரசியல் தேவைகளுக்காக – இந்த நாட்டில் ஏழைகளைக் கொல்லதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர்.

எனவே சர்வதேசத்தைப் பார்த்துக் கேட்கின்றோம். எங்களுக்கு நீதிவேண்டும். அது சர்வதேச தவையீட்டின் மூலம் ஏற்படுகின்ற நீதியாக இருக்கவேண்டும். இந்த நாட்டில் எங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை இப்போது உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளிப்பட்டிருக்கின்றது.

நாங்கள் 14 வருடங்களாக சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்கு செவிமடுக்காத தென்னிலங்கை அரசியல்வாதிகள் இப்போது சர்வதேச விசாரணை வேண்டும் என்கின்றனர். எனவே, இது தான் நீதி. இது தான் மனுநீதி. இது தான் இறைநீதி.

எந்த மக்கள் சர்வதேச விசாரணை வேண்டாம் எனக் கோரினார்களோ அவர்களின் வாயாலே இப்போது சர்வதேச விசாரணை வேண்டும் என்றால் இப்போது அவர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது. எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தித் தண்டிக்கப்படவேண்டும். அதுவரை எமது போராட்டம் தொடரும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.