பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரைச் சந்தித்த சாணக்கியன்!
பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரான கமிலா சுக்டனை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் புதன்கிழமை சந்தித்திருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் மற்றும் கொடுத்துவரும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சாணக்கியன் –
மே மாதத்துக்கு பின்னரான இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் இல்லாதவிடத்து தற்பொழுது ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்திக்கும் நேரம் தான் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்வலத்தின் போது தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனவே இச்சம்பவம் சம்பந்தமாகவும் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுதல் மற்றும் இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் அரசு நடந்து கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு பற்றியும் திருகோணமலை மற்றும் பல பிரதேசங்களில் இடம்பெறும் அத்துமீறிய விகாரை அமைக்கும் நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. – இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை