குற்றச் செயல்கள் நாட்டில் இடம்பெற போதைப்பொருள் பாவனையே காரணம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கருத்து
கொலைகள் மற்றும் பாலியல் குற்றச்செயல்கள் இடம்பெற போதைப்பொருள் பாவனையே பிரதான காரணமாகும். சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான கொலைகள் போதைப்பொருள் வர்த்தகர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. எனவே, சமூகத்தில் குற்றச்செயல்களை இல்லாதொழிப்பதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
பாணந்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது –
பெண் ஒருவர் வீதியில் நடந்து செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வருகை தரும் சிலர் கழுத்தில் உள்ள தங்க நகையைப் பறித்துச் செல்கிறார்கள். இரவில் திருடர்கள் வந்து வீட்டில் இருப்பவர்களிடத்தில் ஆயுதங்களைக் காண்பித்து பயமுறுத்தி சொத்துக்களை அபகரித்துச் செல்கிறார்கள்.
சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான கொலைகள் போதைப்பொருள் வர்த்தகர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. அண்மையில் மாளிகாகந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது 6 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்திருந்தார். சிறுமியின் தந்தை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என்பதாலேயே அன்று துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று எம்மிடத்தில் இந்த குற்றச்செயல்கள் மூலம் பயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் பற்றிய தினசரி செய்திகளே இந்த குற்ற பயத்திற்கு காரணமாகும்.குற்றச்சம்பவங்கள் குறித்த அச்சத்தை இல்லாதொழிப்பது பொலிஸாரின் பொறுப்பாகும். போதைப்பொருள் பாவனையே இந்த குற்றச்செயல்களுக்கு முக்கியக் காரணமாகும்.
போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் அடிமையாதல் போன்றவற்றால் இவர்கள் திருட்டு, கொள்ளை மற்றும் கொலைகளில் ஈடுபட முனைகிறார்கள். எனவே, சமூகத்தில் குற்றச்செயல்களை இல்லாதொழிப்பதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை