ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை ஐ.தே.க. பொதுச் செயலாளர் ரங்கே பண்டார கூறுகிறார்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விசாரணையை மேற்கொள்ள உள்நாட்டில் சிறந்த விசாரணை அதிகாரிகள் இருக்கும்போது அதனை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்லத் தேவையில்லை.
குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சர்வதேசத்துக்கு வழங்கவேணடும் என எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது எமது அரசாங்கத்திலாகும். அதனால் இந்தத் தாக்குதல் தொடர்பான பின்னணியை அறிந்துகொள்ளும் தேவை எமக்கு இருக்கிறது.
என்றாலும் இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு விசாரணைகள் இடம்பெற்றிக்கின்றன. ஹூதலாகம் குழுவின் விசாரணை அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குவின் விசாரணை அறிக்கை சர்வதேசம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில் எமது நாட்டில் திறமையான விசாரணையாளர்கள் இருக்கும்போது நாங்கள் ஏன் இதனை சர்வதேச விசாரணைக்கு வழங்க வேண்டும்.
எமது நாட்டில் முறையாக விசாரணை இடம்பெறவில்லை என்றால், எமது நாட்டு விசாரணை அறிக்கையை சர்வதேசம் மறுத்திருந்தால் அப்போது எங்களுக்கு இது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு செல்வது குறித்து ஆராயலாம்.
அத்துடன், பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் நம்பத்தகுந்த உள்நாட்டு விசாரணை இடம்பெறுமாக இருந்தால் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியப்படாது எனத் தெரிவித்திருக்கிறார்.
அதனால் ஏற்கனவே இரண்டு விசாரணைகள் இடம்பெற்று அறிக்கை சமர்ப்பிக்கப்படுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 3 பேர் கொண்டு விசாரணைக்குழுவொன்றை நியமித்திருக்கிறார். அதேபோன்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
எனவே, இந்த விசாரணைக்குழுக்களின் அறிக்கைகளில் தெரிவிக்கப்படும் விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் இருக்கும் தாமதமே உள்நாட்டு விசாரணையின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகம் எழுவதற்கு காரணமாகும். அதனால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முறையாக விசாரணை மேற்கொண்டு சூத்திரதாரிகள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை