தமிழகக் கடல் தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என டக்ளஸ் கைவிரிப்பு!

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக தாம் முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.

அதன் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக கடற்தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும், செயற்பாட்டை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும், அவர்களைக் கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்.

கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த, கடந்த 20 வருட காலமாக நான் முயற்சித்து வருகின்றேன். இந்த அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்காக பல பேச்சுகளிலும் நான் கலந்து கொண்டேன். ஆனால் அந்த பேச்சுகளில் எந்த சாதகமான முடிவும் எட்டப்படவில்லை.

தற்போது ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கின்றேன். நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்களுடன் , இந்தியா சென்று இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி ஓர் உண்மையான நிலைமையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என, அதற்கு நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் எனக் நம்புகின்றேன்.

அதன் மூலம் இதற்கு ஒரு சாதகமான முடிவை எடுக்க முடியும். எல்லை தாண்டும் பிரச்சினை. இலங்கையில் மாத்திரமல்ல இது ஏனைய உலக நாடுகளிலும் காணப்படுகின்றது. இரு நாடுகளின் பிரச்சினை இரு நாடுகளுனான பேச்சு மூலம் தீர்க்க முடியும் என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.