வாழ்வோம் வளம்பெறுவோம் கட்டம் 60 இல் முல்லைத்தீவில் 42 பயனாளிகள் உள்ளீர்ப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்படும் ‘வாழ்வோம் வளம்பெறுவோம்’ செயற்றிட்டத்தின் அறுபதாங் கட்டம் ஒக்ரோபர் (02) திங்கட்கிழமை கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள அவரது மக்கள் தொடர்பகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 42 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் –

‘வாழ்வோம் வளம்பெறுவோம்’ என்ற பெயரிலான செயற்றிட்டம் குறுங்கால வாழ்வுடைமை ஊக்குவிப்பு நோக்கில் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த செயற்றிட்டம், ரவிகரன் கடந்த 17.05.2014 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த அறுபதாங் கட்டத்துடன் இதுவரையில் 3461 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் பாலா, நளினி குடும்பத்தினர் இக்கட்டத்திற்கான நிதி உதவி வழங்கியிருந்தனர்.

அதேவேளை பொருளாதாரம் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பலர் பாடசாலைக்கு நீண்டதூரம் நடந்து செல்வதாகவும், அவர்களுக்கு சைக்கிள்கள் வழங்குமாறு இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பொதுமக்களால் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு நீண்டதூரம் பாடசாலைக்கு நடந்து சென்று கல்வி பயிலும் பொருளாதாரம் நலிவுற்ற மாவர்களுக்கு, கடந்த வடமாகாணசபைக் காலத்தில், மாகாணசபை நிதி ஒதுக்கீட்டினூடாகவும், புலம்பெயர் உறவுகளின் நிதி ஒதுக்கீட்டினூடாகவும் அதிகளவான சைக்கிள்களை வழங்கியிருப்பதாக ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இவ்வாறு மாகாணசபை இல்லாத நிலையிலும் இவ்வாறான அரிசி வழங்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நிதியுதவியினை வழங்குகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மிதிவண்டிகள் வழங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்போது, இதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியது போன்று, நிச்சயமாக மிதிவண்டிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இராசநாயகம் ஜெரோம்சன், கிருஸ்ணபிள்ளை சிவகுரு உள்ளிட்டவர்ளும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.