கொக்குத்தொடுவாயிலும் நீதிபதியை அச்சுறுத்தி உண்மைகளை மூடிமறைக்க அரசதரப்பு முயலுமா? ரவிகரன் அச்சம்

நீதிபதி சரவணராஜாவிற்கு குருந்தூர்மலை விவகாரத்தில் அரசதரப்பால் அரசியல் ரீதியாகப் பிரையோகிக்கப்பட்ட மன அழுத்தம் மற்றும், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் தனது பதவியைத் துறந்து இந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ள இத்தகைய சூழலில், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்திலும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்பட்டு உண்மைத்தன்மை மூடி மறைக்கப்படுமோ என்ற அச்சம் எழுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேச சிறுவர்தினமான ஒக்ரோபர் முதலாம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

சர்வதேசரீதியில் சிறுவர்களும், முதியவர்களும் ஒக்ரோபர் (01)இல் தமக்கான தினத்தில் மகிழ்வோடிருக்கின்றனர்.

இந் நிலையில் இறுதிக்கட்ட போர்க் காலத்தில் இராணுவத்திடம் கையளித்த சிறார்களையும், உறவுகளையும் மீளக் கையளிக்குமாறு வலியுறுத்தி எமது உறவுகள் இரண்டாயிரம் நாள்களுக்கு மேலாக பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமாத்திரமின்றி, இந்த நாட்டில் நீதித் துறையின் சுயாதீனத் தன்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. குறிப்பாக அரசியல் ரீதியாக அரச தரப்புக்கள் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு அழுத்தங்களைப் பிரயோகித்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து இவ்வாறாக பல வழிகளிலும் நீதிபதியைத் துன்புறுத்திய நிலையில் நீதிபதி தனது பதவியைத் துறந்து இந்த நாட்டிலிருந்து வெளியேறியிருக்கின்றார்.

தற்போது கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு நீதிபதி, சட்டவைத்திய அதிகாரி, தொல்லியல் துறையினர் ஆகிய தரப்புக்களின் பங்கேற்புடன் இந்த ;மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான சூழலில் அரசியல் ரீதியாக அரசதரப்புக்கள் பிரயோகித்த அழுத்தங்கள் மற்றும், அச்சுறுத்தல் நிலைமைகள் காரணமாக நீதிபதி இந்த நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சூழலில், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்திலும், அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்பட்டு உண்மைத்தன்மை மூடி மறைக்கப்படுமோ என்ற அச்சம் எமக்குத் தோன்றியிருக்கின்றது – என்றார்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.